டோக்கியோ பாராலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற அவானி லெஹராவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில், மகளிருக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அவானி லெஹரா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இது பாராலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதல் வரலாற்றில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "பாராலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் பெற்றுள்ள அவானி லெஹராவுக்கு எனது வாழ்த்துகள். தாங்கள் படைத்துள்ள பெரும் சாதனையால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாரா ஒலிம்பிக்கில் பிற போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “வட்டு எறிதலில் வெள்ளி வென்றுள்ள யோகேஷ் கத்தூனியாவுக்கும், ஈட்டி எறிதலில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள தேவேந்திர ஜாஜாரியா மற்றும் சுந்தர் சிங் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.