நத்தம் மார்க்கெட்டில் விற்பனைக்காக கூடைகளில் வைக்கப்பட்டுள்ள நாவல்பழங்கள்.  
ஒரு நிமிட வாசிப்பு

மருத்துவ குணமிக்க நாவல்பழங்கள்: விளைச்சல் அதிகரிப்பால் எதிர்பார்த்த விலை இல்லை; நத்தம் விவசாயிகள் பாதிப்பு

பி.டி.ரவிச்சந்திரன்

நத்தம் பகுதியில் மருத்துவகுணமிக்க நாவல்பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. இந்த ஆண்டு உரிய நேரத்தில் மழை பெய்ததால் விளைச்சல் அதிகரித்துள்ளதால் எதிர்பார்த்த விலை கிடைக்காத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் நாவல் மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. மற்ற பயிர்களை பயிரிடுவதில் அதிக கவனம் செலுத்தும் விவசாயிகள் சீசனுக்கு வருவாய்தரும் நாவல்பழ மரங்களையும் தோட்டப்பகுதிகளில் வளர்த்து வருகின்றனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் நாவல்பழம், இனிப்பும், துவர்ப்பும் கலந்த சுவையை உடையது. அதிக சத்து மற்றும் மருத்துவ குணம் நிறைந்த பழம்.

சங்க இலக்கியங்கள், புராணங்களில் கூறப்பட்ட பழமைமிக்க பழமான நாவல்பழத்திற்கு என்றும் மவுசு அதிகம். ஆண்டு தோறும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நாவல் மரங்கள் விளைச்சல் தரும். இந்த ஆண்டிற்கான சீசன் நடந்துவருவதால் மரங்களில் நாவல் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. இந்த ஆண்டு உரிய நேரத்தில் மழை பொழிவு இருந்ததால் நாவல்பழ விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.

நாவல் மரத்தின் கீழ் வலை கட்டப்பட்டு பழங்கள் உதிர்ந்து விழுந்தாலும் மண்ணில் படாமல் சேகரிக்கப்படுகிறது. மரத்தில் உலுப்பப்படும் நாவல்பழங்களையும் சேதமடையாமல் விவசாயிகள் சேகரித்து மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

நத்தம் பகுதியில் விளையும் நாவல்பழங்கள் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி, அருகிலுள்ள மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த ஆண்டு வரத்து குறைவு காரணமாக அதிகவிலைக்கு விற்கப்பட்டநிலையில் இந்த ஆண்டு விளைச்சல் அதிகம் காரணமாக விலை குறைந்தே விற்பனையாகிறது. மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ நாவல்பழம் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையாகியது. இதை வாங்கிச்செல்லும் வியாபாரிகள் சில்லரை விற்பனையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

SCROLL FOR NEXT