கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடத்தை இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றிய பணியாளர்கள் | படம்:ஜெ.மனோகரன். 
ஒரு நிமிட வாசிப்பு

கோவையில் ரூ.2 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட உணவகம் இடித்து அகற்றம்

க.சக்திவேல்

கோவையில் ரூ.2 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட உணவகக் கட்டிடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று (ஜூலை 6) இடித்து அகற்றினர்.

கோவை காந்தி பார்க், சுக்ரவார்பேட்டை சாலையில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 909 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட கட்டிடத்தில் தனியார் உணவகம் செயல்பட்டு வந்தது. கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானது என அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதைத் தொடர்ந்து இடத்தை காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. எனினும் அவர்கள் இடத்தை காலி செய்யவில்லை.

இதையடுத்து, ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த உணவகக் கட்டிடத்தை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி தலைமையில், கோயில் செயல் அலுவலர் காளியப்பன், வருவாய்த் துறை, தீயணைப்புத் துறையினர், போலீஸார் பாதுகாப்போடு ஊழியர்கள் ஜேபிசி இயந்திரம் மூலம் இன்று இடித்து அகற்றினர்.

SCROLL FOR NEXT