சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்ட மின்மயானத்தை திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உரிய நடவடிக்கை எடுப்பதாக மாங்குடி எம்எல்ஏ உறுதி அளித்தார்.
தேவகோட்டை நகராட்சி சார்பில் ராம்நகர் பகுதியில் 2017-ம் ஆண்டு ரூ.80 லட்சத்தில் மின் மயானம் கட்டப்பட்டது. இந்த மின் மாயனம் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டதால் அப்போதே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருந்தபோதிலும் 2019-ம் ஆண்டு கட்டிட பணிகளை முடித்தனர்.
ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பால் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் மின் மயானத்தை திறக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து அவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர், கார்த்திசிதம்பரம் எம்பி, மாங்குடி எம்எல்ஏ ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.
இதையடுத்து நேற்று மின் மயானத்தை மாங்குடி எம்எல்ஏ ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்கள் எம்எல்ஏவிடம் கூறியதாவது: ராம்நகர், நாச்சியாபுரம், கண்ணங்கோட்டை, உடப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
குடியிருப்பு நிறைந்த இப்பகுதியில் நகராட்சி காலியிடம் இருக்கிறது என்பதற்காகவும், மின் மயானம் கட்டியுள்ளனர்.
கட்டும்போதே எதிர்ப்பு தெரிவித்தோம். இதனால் கட்டிடத்தை திறக்காமல் வைத்திருந்தனர். தற்போது திறக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மின் மயானத்தை திறந்தால் அங்கிருந்து வெளியேறும் புகையால் வீடுகளில் குடியிருக்க முடியாது. இதனால் ஏற்கனவே மயானம் இருந்த பகுதியில் மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்தனர்.
இதையடுத்து எம்பி, மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.