புதுச்சேரியில் 21 நாட்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. இன்று புதிதாக 992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் சிகிச்சை பலனில்லாமல் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,382 ஆக அதிகரித்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கரோனா தொற்றால் 645 பேர் புதுச்சேரியில் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கடந்த சில வாரங்களாக அதிகரித்த வந்த நிலையில், தற்போது தொற்றின் வேகம் குறையத் தொடங்கியுள்ளது. தினந்தோறும் ஆயிரத்திலிருந்து 2 ஆயிரம் பேருக்கு மேல் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். கடந்த 3ஆம் தேதி மட்டும் தொற்று பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இருந்தது. அதன்பிறகு 21 நாட்களுக்குப் புதுச்சேரியில் தொற்று பாதிப்பு இன்று குறைந்துள்ளது.
நேற்று 7,674 பேருக்குத் தொற்று பரிசோதனை நடந்ததில் புதிதாக 922 பேருக்குத் தொற்று பாதிப்பு இன்று உறுதியானது. அத்துடன் இன்று 1,915 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் தொற்றிலிருந்து நலமடைவோர் சதவீதம் 82.25 ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் தொற்றினால் உயிரிழப்புகள் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. இன்று மட்டும் 23 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதனால் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,382 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 24இல் 737 பேர் மட்டுமே கடந்த கால கரோனாவில் உயிரிழந்தனர். ஏப்ரல் 24 முதல் மே 24 வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் 645 பேர் அதிக அளவாக உயிரிழந்துள்ளனர்.