ஒரு நிமிட வாசிப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் கர்ப்பிணி, தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு பணி விலக்கு

எஸ்.விஜயகுமார்

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கர்ப்பிணி மற்றும் தாய்ப் பாலூட்டும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பெண்கள் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுவதில் இருந்து விலக்களித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 850-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பெண்களில், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு, கரோனா சிகிச்சைப் பிரிவில், பணியாற்றுவதில் இருந்து விலக்களித்து, மருத்துவமனை டீன் முருகேசன் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா (32) கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார்.

கர்ப்பிணிப் பெண்களை முன்களப் பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கர்ப்பிணி மற்றும் தாய்ப் பாலூட்டும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பெண்கள் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுவதில் இருந்து விலக்களித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT