தமிழகம் முழுவதும் பேரூராட்சி அலுவலகங்களில் 2 வாரங்களாக இணையம் முடங்கியதால் வரி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 528 பேரூராட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் இணையமயமாக்கப்பட்டநிலையில் பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி செலுத்துதல், பிளான் அப்ரூவல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் இணைய வழியிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேரூராட்சிகள் இணையதள சர்வரை தனியார் நிறுவனம் ஒப்பந்தம் அடிப்படையில் நிர்வகித்து வந்தது. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது.
மேலும் தேர்தல் சமயம் என்பதால் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதனால் ஏப்.1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பேரூராட்சி அலுவலகங்களில் இணையதளம் முடங்கியுள்ளது.
இதனால் பிறப்பு, இறப்பு பதிவு செய்தபிறகு கட்டணம் செலுத்துதல், சொத்து வரி, குடிநீர் கட்டணம் வசூலித்தல் போன்ற பணிகள் முடங்கியுள்ளன.
சில பேரூராட்சிகளில் இணையதளம் முடங்கியதாக கூறி எந்த பணியையும் செய்யாமல், மக்களை திருப்பி அனுப்புகின்றனர். ஆனால் ஒருசில பேரூராட்சிகளில் பழைய முறைப்படி பதிவேட்டில் பதிந்து வரிவசூல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘முடங்கிய இணையதளத்தை சரிசெய்யும் பணியில் தேசிய தகவல் மையம் (என்ஐசி) ஈடுபட்டு வருகிறது. விரைவில் சரியாகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை பதிவேட்டில் பதிவு செய்து வரிவசூலித்தல் போன்ற பணிகளை செய்கிறோம். இணையதளம் சரியானதும், அனைத்து பணிகளும் இணையம் மூலமே மேற்கொள்ளப்படும்,’ என்று கூறினர்.