புத்துணர்வு முகாமுக்குச் செல்லும் பழநி கோயில் யானைக்கு கரோனா பரிசோதனை

புத்துணர்வு முகாமிற்குப் புறப்பட உள்ள பழநி கோயில் யானைக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான கஸ்தூரி என்ற பெண் யானை உள்ளது. ஆண்டுதோறும் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் கோயில் யானைகள் பங்கேற்கும் புத்துணர்வு முகாமிற்குச் சென்றுவருவது வழக்கம்.

இந்த ஆண்டு யானைகள் புத்துணர்வு முகாம் பிப்ரவரி 8-ம் தேதி தேக்கம்பட்டியில் தொடங்க உள்ளது. இதற்காக பழநி கோயில் யானையான கஸ்தூரி, பிப்ரவரி 7-ம் தேதி லாரி மூலம் தேக்கம்பட்டிக்கு முகாமில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதையடுத்து கோயில் யானை கஸ்தூரிக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முகாமிற்கு யானையுடன் செல்லும் கால்நடை டாக்டர்கள், பாகன்கள், கண்காணிப்பாளர் உள்ளிட்ட 11 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு யானை மற்றும் அதனைப் பராமரிக்க உடன் செல்பவர்கள் முகாமிற்குச் செல்வது உறுதி செய்யப்படவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE