வலைஞர் பக்கம்

இந்தியா @ 75: சுதந்திர இந்தியாவும் கலாசார பன்முகத்தன்மையும்    

செய்திப்பிரிவு

கடந்த 2020-ம் ஆண்டு "நமஸ்தே ட்ரம்ப்" நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியா வந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், " இந்தியாவில், இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின்கள், பவுத்தர்கள், யூதர்கள் என பலதரப்பட்ட மக்களும் நல்லிணக்கத்துடன் தங்கள் கடவுள்களை வழிபடுவதை காணமுடிகிறது. இதனால்தான் உலக நாடுகளால் இந்தியா போற்றப்படுகிறது" என்று அவர் கூறியிருந்தார்.

உலக வரைபடத்தில் உள்ள நாடுகளில், இத்தனை மதம், மொழி, கலாசாரம், பண்பாட்டு வழிமுறைகளைக் கடைபிடித்து வாழும் நாட்டினை காண முடியாது. இந்த கலாசார பன்முகத்தன்மைதான் இந்தியாவிற்கான பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் இந்தியா என்றவுடன் அனைவருக்கும் "வேற்றுமையில் ஒற்றுமை" (Unity in Diversity) என்பது நினைவுக்கு வருகிறது.

மொழி, உணவு, உடை, நிறம், மதம், என்பது உள்ளிட்ட மாறுபட்ட பழக்கவழக்கங்களுடன் இந்தியாவில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். இந்த ஒற்றுமையால்தான் உலகம் இந்தியாவை தனித்துவமிக்க நாடாக பார்க்கிறது.

திராவிடர்கள், நீக்ராய்ட்ஸ், ஆரியர்கள், ஆல்ஃபைன்ஸ் மற்றும் மங்கோலியர்கள் ஆகியோர்தான் நவீன இந்தியாவில் காணப்படும் 4 முக்கிய இனக்குழுக்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். பல்வேறு காரணங்களுக்கான இனக்குழுக்களின் இடம்பெயர்தல், இந்தியா முழுவதும் பல்வேறு கலாசார தன்மைக் கொண்ட மக்களை காணமுடிகிறது. இதன் நீட்சியே அண்மைக் காலத்தில், தமிழகத்தின் குக்கிராமங்களில் நாம் காணும் வட இந்தியர்களும், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும்.

இந்திய மக்களிடையே நிலவும் வேற்றுமைகள் 5 வகைபாட்டின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது.

> நிலம் மற்றும் வாழ்க்கை முறை (Land and Lifestyle)

> சமூகம் (Social)

> மதம் (Religious)

> மொழி (Lingustics)

> கலாசாரம் (Cultural)

> நிலம் மற்றும் வாழ்க்கை முறை (Land and Lifestyle) துணைக் கண்டமான இந்தியாவில் மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல், பாலைவனம் என பல்வேறு நிலவமைப்புகள் காணப்படுகின்றன.

இந்த நிலபரப்புகளில் நிலவும் காலநிலை மற்றும் வளங்களுக்கு ஏற்ப அங்கு வாழும் மக்களின் பொருளாதாரம் அமைந்திருக்கும். மேலும், இந்த நிலபரப்புகளில் நிலவும் காலநிலை மற்றும் இயற்கை வளங்களுக்கு ஏற்ற வகையில்தான், அந்தப் பகுதிகளில் வளரும் தாவரங்களும், வாழும் விலங்குகளும் இருக்கும். இதன் அடிப்படையிலேதான், அங்கு வாழும் மக்களின் உடைகள், உணவுகள் அமைந்திருக்கும்.

> சமூகம் (Social) சமூகத்தின் அடிப்படை அலகுகளாக குடும்பங்கள் பார்க்கப்படுகிறது. எனவே, குடும்பங்களும் சமூகமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. பல குடும்பங்கள் சேர்ந்ததுதான் சமூகம், எனவே சமூகம் குடும்பங்களைச் சார்ந்திருக்கிறது. குடும்பங்கள் கூட்டுக்குடும்பங்கள்,
தனிக்குடும்பம் என்று இருவகை கொண்டவை .

> மதம் (Religious) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை, இந்தியாவை மதசார்பின்மை (Secularism) கொண்ட நாடாக வரையறுத்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வாழும் யாரும் அவரவர் மதங்களை சுதந்திரமாக பின்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் உறுதி செய்கிறது.

இந்தியாவில் இந்து, இஸ்லாம், சீக்கியம், பவுத்தம், ஜெயின், கிறிஸ்தவம் உள்ளிட்ட பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். இதனால் இந்தியாவில் கொண்டாடப்படும் திருவிழாக்களுக்கு பஞ்சமே இருக்காது.

தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, விஜயதசமி, துர்கா பூஜை, தசரா, ஹோலி, புத்த பூர்ணிமா, குருநானக் ஜெயந்தி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், மிலாடி நபி, ஓணம், என இந்தியா முழுவதும் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் விழாக்கள் பல்வேறு வண்ணங்களால் நிறைந்திருக்கிறது. இந்த நல்லிணக்கத்துடன் கூடி கொண்டாட்டங்களும், வழிபாடுகளும்தான் உலகின் பிற கலாசாரங்களைவிட இந்தியாவின் கலாசராத்தை உயர்வானதாக காட்டுகிறது.

> மொழி (Lingustics) 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 122 மொழிகளை 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பேசுகின்றனர். இவை தவிர இந்தியாவில் 1599 மொழிகளும் பேசப்படுகின்றன. மொழிகளைப் பொறுத்தவரை இந்தியாவில் இந்தோ ஆரியன் (Indo Aryan), திராவிட மொழிகள் (Dravidian), ஆஸ்ட்ரோ ஆசியாடிக் (Austroasiatic) மற்றும் சீனோ திபெத்யன் (Sino Tibetian) ஆகிய 4 பிரதான மொழிக் குழுக்கள் உள்ளன.

இவை தவிர போர்த்துகீசியர்கள், டச்சுகாரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், டேனிஷ், பிரெஞ்சுக்காரர்கள் என பல்வேறு தரப்பட்ட நாட்டினரும் இந்தியாவின் ஒரு சில பகுதிகளை ஆட்சியும் செய்துள்ளனர். இதில் பிரிட்டிஷ்காரர்களின் கீழ் இந்தியா 300 ஆண்டுகளுக்கு மேல் இருந்துள்ளது. இதனால், ஆங்கிலத்தை அவர்கள் அலுவல் மொழியாக பயன்படுத்தினர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் உள்ள 22 மொழிகளை அதிகாரபூர்வ மொழிகளாக அறிவித்துள்ளது. 6 மொழிகள் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு தமிழ் மொழி செம்மொழியாக அங்கீகரிகப்பட்டது.

> கலாசாரம் (Cultural) உணவு, உடை, கலை, இலக்கியம், இசை, நடனம், கட்டுமானங்கள் மற்றும் வாழ்வியல் முறைகள் என வழிவழியாக பின்பற்றப்படும் நடைமுறைகள் கலாசாரத்தின் அடிப்படை கூறாகும். இந்தியாவில் 28 மாநிலங்களும் 9 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. ஆச்சரியம் என்னவென்றால், இந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாழும் மக்களின் உணவு, உடை, வழிபாடு, கலை, இலக்கியம், அமைவிடம் என அனைத்தும் வெவ்வேறானவை. இந்த மாநிலங்களின் கலாசாரத்திற்கேற்ப இங்குள்ள குடியிருப்பு மட்டுமின்றி கோயில்கள், நினைவுச் சின்னங்களின் கட்டுமானங்களும் காணப்படுகிறது.

உலகில் இந்தியாவின் கலை வடிவங்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. அதிலும் இந்திய இசை மற்றும் நடனக் கலைகள் பாரம்பரியம் கொண்டவை. ஹிந்துஸ்தானி, கர்நாடக சங்கீதம், தமிழ் செவ்வியல் இசை, நாட்டுப்புற இசை, லவானி, கஜல் என பல்வேறு இசை வடிவங்களும், கதக், கதகளி, பரதநாட்டியம், மணிபுரி, ஒடிஸி, குச்சிப்புடி, மோகினியாட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான நடனங்களும் உள்ளன. இத்தனை வேற்றுமைகளைக் கடந்தும், பன்முகத்தன்மைக் கொண்டதாக விளங்கும் இந்தியாவின் கலாசாரத்தால் இந்தியா இன்னும் மிளிர்கிறது.

SCROLL FOR NEXT