சிறந்த ராஜதந்திரி, முன்னாள் மத்திய அமைச்சர்
சிறந்த ராஜதந்திரியாக விளங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன் (V.K.Krishna Menon) பிறந்த தினம் இன்று (மே 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செழிப்பான குடும்பத்தில் (1896) பிறந்தார். குடும்பப் பெயர் ‘வெங்காலில்’. தந்தை கிருஷ்ண குருப், வெற்றிகரமான வழக்கறிஞர். தலசேரி, கோழிக்கோட்டில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, சாமுத்திரி கல்லூரியில் பயின்றார்.
l சென்னை பிரசின்டென்சி கல்லூரி யில் வரலாறு, பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அன்னி பெசன்ட்டின் ஹோம் ரூல் இயக்கத்தில் இணைந்தார். பிரம்ம ஞானத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
l அன்னி பெசன்ட்டின் ‘பிரதர்ஸ் ஆஃப் சர்வீஸ்’ அமைப்பின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டார். அவரது உதவியுடன் இங்கிலாந்து சென்றார். உளவியலில் முதுகலைப் பட்டம், அரசியல் அறிவியலில் எம்எஸ்சி பட்டம், கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றார்.
l பத்திரிகையாளராக சிறிது காலம் பணியாற்றினார். இங்கிலாந்து பார் கவுன்சிலில் பதிவு பெற்றார். தொழிற்கட்சியில் இணைந்தவர், பின்னர் இந்திய விடுதலைக்கு ஆதரவு திரட்ட இந்தியா லீக் அமைப்பின் செயலாளராக லண்டனில் பணியாற்றினார்.
l உணர்ச்சிகரமான பேச்சாளரான இவர், இங்கிலாந்து முழுவதும் சென்று இந்திய விடுதலையின் அவசியம் குறித்து அந்நாட்டு மக்களிடம் பேசி ஆதரவு திரட்டினார். இந்த அமைப்பு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இங்கிலாந்து கிளையாக செயல்பட்டது. இதனால், நேருவை சந்திக்கும் வாய்ப்பை பெற்றார்.
l 1947-ல் நாடு திரும்பியவர், நேருவின் சிறப்பு தூதராக நியமனம் பெற்றார். வெளியுறவுக் கொள்கை செய்தி தொடர்பாளர், பிரிட்டனுக்கான இந்திய ஹை கமிஷனர், ஐ.நா. சபையின் இந்தியப் பிரதிநிதி ஆகிய பொறுப்புகளை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
l அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர். பாதுகாப்பு துறையில் புதிய உத்வேகத்தைக் கொண்டுவந்தார். இவரது கொள்கைகளும் வழிநடத்துதலும் வலுவான ராணுவம் உருவாக காரணமாக அமைந்தன. தற்போது புகழ்பெற்று விளங்கும் சைனிக் பள்ளிகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இவரது சிந்தனையில் உதித்ததுதான்.
l கடமையில் கண்டிப்புடனும் உறுதியுடன் இருந்தார். பத்மவிபூஷண் விருது பெற்றார். ‘டைம்’ உட்பட உலகின் பல பிரபல பத்திரிகைகளும் ‘இந்தியாவின் ஆற்றல் மிக்க 2-வது மனிதர்’ என புகழாரம் சூட்டின.
l ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் உரிமைகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் 8 மணி நேர உரை நிகழ்த்தி உலகப் புகழ்பெற்றார். இவரது இந்த பேச்சு, காஷ்மீரில் இந்தியாவின் நிலையை பாதுகாப்பதற்கும், காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. சபை அப்போதைக்கு தீர்த்துவைப்பதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
l ‘காஷ்மீரின் நாயகன்’ எனப் புகழப்பட்டார். மேற்கத்திய உலகில் இந்தியாவை உயர்த்திப் பேசுவதிலும், யாராவது இந்தியாவுக்கு எதிராகப் பேசினால் அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதிலும் அசகாய சூரர். மனஉறுதி, அறிவுக்கூர்மை மிக்கவர். கடும் உழைப்பாளி. சிறந்த தேசபக்தர். வாழ்நாள் முழுவதும் நாட்டின் சேவைக்காக அர்ப்பணித்துக் கொண்ட வி.கே.கிருஷ்ண மேனன் 78-வது வயதில் (1974) மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்