இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம் 10-ம் நாளில்தான் ஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் ‘கர்பலா’ என்ற இடத்தில் யுத்தம் நடந்தது. வாரிசு அரசியல் இஸ்லாத்தில் இல்லை என்பதால்தான் நபிகளார் (ஸல்) அவர்களுக்கு ஆண் மக்கள் பிறக்க வைக்கப்பட்டு, சிறுவயதிலேயே அல்லாஹ்வால் எடுத்துக் கொள்ளப் பட்டனர்.
பதவியிலும் சரி, பங்கிலும் கூடவாரிசுரிமை இல்லை என்பதால்தான், ஃபாத்திமா (ரழி) அவர்களிடம் கலீஃபா அபூபக்ர் ஸித்தீக் (ரழி)அவர்கள், ‘தலைவரின் குடும்பத்துக்கு உதவித்தொகை தரலாமே தவிர பங்கெல்லாம் கிடையாது’ என மறுத்துவிட்டது இதற்கு சாட்சி.
அலீ (ரழி) அவர்களின் கிலாஃபத்தில் நடந்த உமையா - குறைஷ் குழுச் சண்டையான ‘ஷிஃப்ஃபீன்’ அன்றைய பல நபித்தோழர்களை தடுமாறச் செய்து, ஹஸ்ரத் முஆவியா (ரழி) அவர்களுக்கு கிலாஃபத்தில் பங்கு கொடுத்தது. அலீ (ரழி) ஷஹீதான பின், ‘‘முஆவியாவே முழு இஸ்லாமிய தேசத்துக்கும் கலிஃபாவாக இருப்பது என்றும், அவர் வஃபாத்தானால், மக்கள் தாங்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் ஒருவரை கலீஃபாவாக்கிக் கொள்ளலாம்” என்றும் ஒப்பந் தம் செய்யப்பட்டது.
மன்னராட்சி பிரகடனம்
ஆனால் மக்காவின் குரைஷ் - உமையா குடும்பத்தினரில், குரைஷ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்ததும், தொடர்ந்து குரைஷ்களே தலைமைக்கு தகுதியானவர்களாக வந்து கொண்டிருப்பதும் உமையாக்களின் கண்களை உறுத்தியது. எனவே உமையா குடும்பத்தின் முஆவியா (ரழி) சிரியாவின்கவர்னர் ஆனதும், உமையாக்களின் ஆட்சியில் இஸ்லாமிய அரசுவர விரும்பி, மக்கள் ஆட்சி (கலீஃபா) என்பதிலிருந்து மன்னராட்சி (அமீர்) என பிரகடனப்படுத்தி, தான் உலகை விட்டுப்பிரியும் நேரம்தன் மகன் யஸீதை வாரிசாக்கி மகிழ்ந்தார்கள்.
யஸீது ஒருவேளை நல்ல மனிதனாக இருந்தால் கூடப் பரவாயில்லை. தாகத்துக்குக் கூட மது அருந்துபவனாக, பெண் பித்தனாக இருப்பது, இஸ்லாமிய உலகுக்கு தலைமையேற்கத் தகுதியானவன் அல்ல என்பதை சுட்டியது. அன்றைய முஸ்லிம் உலகில் கலிஃபாவாகத் தகுதியானவர் ஹுஸைன் (ரழி) என்பதால், அவர் மூலம் மக்கள்கலகத்தில் ஈடுபடலாம் என்பதால்,மதினாவின் கவர்னர் வலீது மூலம்ஹுஸைன் (ரழி) அவர்கள் யஸீதுக்கு பைஅத் செய்து கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இரண்டு விதமான நெருக்கடிக்கு ஹுஸைன் (ரழி) ஆளாக்கப்பட்டனர். மதினாவின் கவர்னர், “நீங்கள் மக்கா போய்விடுங்கள். அது பாதுகாக்கப்பட்ட நகரம்” என்கிறார். யஸீதின் பிடியில் உள்ள கூஃபா மக்களோ, “போராட வாருங்கள். நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்” என கடிதங்கள் அனுப்பினர். தன் உயிரைப் பாதுகாப்பதைவிட, மக்களின் சுதந்தரத்தை உறுதி செய்வதற்கும், இஸ்லாமிய அரச மரபையும் நிலைநாட்ட கூஃபா நோக்கிய ஹுஸைன் (ரழி) மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 70 பேர் புறப்பட்டனர்.
வழியில் 200 பேர் “ஹுஸைனே!உங்களுக்குத் துணையாக நாங்களும் ஆயுதங்களுடன் வருகிறோம்” என்றதும், “என்னருமை மக்களே! நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தை மனதில் கொண்டு, ‘நாம் வென்றுவிடுவோம். நிறைய பரிசுப்பொருள் கிடைக்கும்’ என்று நம்பி வருகிறீர்கள். ஆனால் நான் செல்வது மரணத்தை உறுதியாக நம்பிச் செல்லும் போராட்டம். விரும்பியவர்கள் வரலாம். ஆனால் நான் அதை விரும்பவில்லை” என தெளிவுபடுத்தியதும் அவர்கள் விலகி விட்டனர்.
இஸ்லாமிய ஜனநாயகம் மலர்ந்தது
கர்பலா என்ற இடத்தில் ஷிம்ர் என்ற யஸீதின் தலைமையில் வந்த வீரர்கள், “அங்கேயே யஸீதை ஏற்பதாக உறுதி செய்ய வேண்டும். அல்லது சாக வேண்டும்” என பயமுறுத்தி சண்டைக்கு அழைக்க, அங்கேயே போர் மூண்டு பலநாட்கள் ஹுஸைனின் கடைசி வீரர் வரைபலிகொடுத்து, ஹுஸைன் (ரழி)அவர்களும் இறுதி 3 நாள் தன்னந்தனியாகப் போராடி உடலெல்லாம் சல்லடையாக்கப்பட்டு விழுந்தார்கள். சர்வாதிகாரம் மரணித்து இஸ்லாமிய ஜனநாயகம் மலர்ந்தது.
ஹுஸைன் (ரழி) அவர்களுக்கு பதவி ஆசை இருந்தால், வழியில்வந்த போர் வீரர்களை தன்துணைக்கு வைத்துக் கொண்டிருக்க முடியும். அவர்கள், “இதுபதவி வெறி பிடித்தவனுக்கும்அதை விரும்பாதவர்களுக்குமான போர்” என உணர்ந்ததாலேயே தன்குடும்பத்தைத் தவிர யாரையும் அழைத்து வரவில்லை. போராட்டவாதிகள் சொற்பமாகவே வாழ்கிறார்கள். போராடுகிறார்கள். அவர்கள் விளைவிக்கும் பலன், இன்றும் சர்வாதிகாரிகளை முகம் காட்டாதுமறைந்தே இருக்கும் நெருக்கடிக்கு ஆளாக்குவதை இன்றைய காலம் வரை யாரும் மறுக்க முடியாது.
கட்டுரையாளர்: ‘நுக்தா’ ஆசிரியர், திருநெல்வேலி, பேட்டை.