கோயில் கோயிலாக திருவிழாக்களுக்கு சென்று விசிறி வீசும் 96 வயது விசிறி தாத்தா நடராஜன், தற்போது கரோனா ஊரடங்கால் கோயில்கள் மூடப்பட்டதால் திருவிழாக்கள் எதுவும் இல்லாமல் அன்றாட வாழ்வாதாரத்திற்கே சிரமப்பட்டு வருகிறார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழக்கமாக செல்கிற எல்லோரும், ‘விசிறி’ தாத்தா நடராஜனை பார்த்திருப்பார்கள். புதிதாக செல்பவர்கள், அவரை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்.
சாமி தரிசனத்திற்காக கோயில் வளாகத்திற்குள் வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வியர்த்துக் கொட்டும் நேரத்திலும் கூட்டம் அதிகமாகும்போது புழுக்கத்தால் மூச்சுவிடக் கூட முடியாமல் பக்தர்கள் தவிக்கும்போதும் அவர்கள் அருகே சென்று ‘விசிறி’தாத்தா நடராஜன், தான் கையில் பிடித்திருக்கும் மயில்தோகை விசிறியால் போதும் போதும் என்றளவிற்கு விசிறிக் குளிர்விப்பார்.
அதற்காக சன்மானம் எதுவும் அவர் கேட்கமாட்டார். ஒரு புன்னகையுடன் அவர்களைக் கடந்து சென்று அடுத்தடுத்து சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இப்படி விசிறிக் கொண்டிருப்பார்.
கோயில் தரினசம் நேரம் முடிந்தவுடன் சிறுசிறு கடைகளில் வேலை செய்து வாழ்க்கை ஓட்டி வந்தார். கோயிலுக்குள் யாரிடமும் கை நீட்டி உதவி கேட்கமாட்டார்.
இவரது நன்னடத்தையால் கோயில் நிர்வாகமே இவரை பக்தர்களுக்கு விசிறி விசூவதற்காக கோயிலில் சாமிதரிசனம் செய்யும் பகுதி வரை அனுமதிக்கும்.
கோயிலுக்கு வெளியே பக்தர்கள் இவரது சேவையைப் பாராட்டி தன்னார்வமாக கொடுக்கும் பணத்தில் அதன்மூலம் பழனி, அழகர்கோயில், திருப்பரங்குன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர், பழனி, சமயபுரம், ராமேசுவரம் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கும் இலவசமக விசிறி வீசி வந்தார்.
சித்திரைத் திருவிழா நாட்களில் கோயிலுக்கு வெளியே பக்தர்களுக்கு விசிறி வீசி அவர்கள் அன்போடு கொடுப்பதை வாங்கி வைத்துக் கொள்வார். அந்தப் பணத்தை சேமித்து வைத்து, கோயில்களில் தொடர்ந்து பக்தர்களுக்கு எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் விசிறி வீசி வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக சித்திரைத்திருவிழாவும் நடக்கவில்லை. தற்போது கரோனா ஊரடங்கால் விசிறி தாத்தா கோயிலுக்குள் சென்று பக்தர்களுக்கு விசிறி வீசவும் முடியவில்லை.
கோயில் விழாக்களும் இல்லாததால் யாரும் நன்கொடை கூட வழங்காததால் தனது அன்றாட வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘ஆரம்பத்தில் மீனாட்சியம்மன் கோயிலில் வெளியே வரும் சாமிக்கு விசிறி வீச ஆரம்பித்தேன். சாமியை பார்க்க கூடிநிற்கும் மக்கள், புழுக்கத்தால் காற்று கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள். அதுபோல், திருவிழாக் காலங்களில் கோயிலுக்குள் நடக்கும் சித்திரைத்திருவிழா நிகழ்ச்சிகளுக்கு வரும் பக்தர்கள், நெருக்கடியால் புழுக்கத்தால் மூச்சுவிடக்கூட சிரமப்படுவார்கள்.
அவர்களுக்கும் விசிறி வீச ஆரம்பித்தேன். எல்லோரும் பாராட்டினார்கள். அதை இப்போதும் தொடர்கிறேன். நான் மீனாட்சியம்மன் கோயிலில் மட்டும் இந்தச் சேவையை செய்வதில்லை.
விசிறியை எடுத்துக் கொண்டு எங்கெங்கலாம் கோயில் விஷேசம் நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று பக்தர்களுக்கு விசிறி வீசுவதை சேவையாக செய்கிறேன்.
உடலில் நடமாடும் தெம்பு இருக்கும் வரை இந்தச் சேவையை செய்வேன். தற்போது விசிறி வீசவும் முடியவில்லை. வேலைக்குப் போகவும் முடியவில்லை. கோயில்கள் திறக்கவிட்டாலும் அன்றாடம் கடவுள் என்னைக் காப்பாற்றுகிறார்,’’ என்றார்.