வெப்பநிலைச் சீராக்கியின் செயல்பாடு மிகவும் எளிதானது. நாம் குறிப்பிட்டிற்கும் வெப்பநிலையை விட அதிகமாகவோ குறைவாகவோ வீட்டு உபயோக சாதனத்தின் வெப்பநிலை சென்றால், வெப்பநிலைச் சீராக்கி உடனடியாக அந்தச் சாதனத்தின் செயல்பாட்டை நிறுத்திவிடும். இதன் தொழில்நுட்ப நீட்சிதான், இப்போது சந்தைகளில் பரவலாக விற்கப்படும் ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கி. தொழில்நுட்ப வளர்ச்சி அதற்குப் பல செயல்பாடுகளைக் கொடுத்திருக்கிறது. இந்தச் செயல்பாடுகள் நமக்கு எண்ணற்ற வசதிகளைக் கொடுப்பதோடு மட்டுமில்லாமல் நமது மின் உபயோகத்தையும் வெகுவாகக் குறைக்கிறது
வெப்பநிலைச் சீராக்கியின் போதாமைகள்
உலக எரிசக்தி அறக்கட்டளையின் ஆய்வின்படி, 60 விழுக்காடு பயனாளிகளுக்கு இந்த வெப்பநிலைச் சீராக்கியை எப்படிச் சரியாக நிறுவுவது என்று தெரியவில்லை. இதனால் வீட்டின் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கிறது. மேலும் இந்த வெப்பநிலைச் சீராக்கிகள் தனித் தனித் தீவைப் போன்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்து இயங்குகின்றன. இதன் செயல்பாடும் மிகவும் குறுகிய ஆற்றல் கொண்டது. செயற்கை நுண்ணறிவைப் பெற்று சுதந்திரமாக இயங்கும் தன்மை இதற்கு முடியாது. நமது அன்றாடத் தேவைகளுக்கு ஏற்றபடியோ அன்று நிலவும் தட்பவெப்பநிலைக்கு ஏற்றபடியோ தன் செயல்பாட்டை மாற்றி அமைக்கும் ஆற்றலும் இதற்குக் கிடையாது.
ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கி (Smart Temperature Controller), நமது தேவைகளுக்கும் தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ப தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும். எந்த நாளில் எத்தனை மணிக்கு என்னென்ன சாதனங்கள் செயல்பட வேண்டும் என்று அட்டவணை போட்டுக் கொடுத்தால், அதன் படி இது அவற்றை இயக்கும். இதனால், நம் வீட்டின் மாதாந்திர மின் கட்டணம் கணிசமான அளவு குறையும்.
சிறப்பம்சங்கள்
ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கி நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் கைப்பேசியைப் போன்று தொடு உணர்ச்சி கொண்ட காட்சித் திரையைக் கொண்டிருக்கும், இதன் மூலம் நமக்கு வேண்டிய செயல்பாடுகளை எளிதில் வடிவமைத்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான செயலிகளைக் கைப்பேசியில் தரவிறக்கம் செய்வதன் மூலம் இதனைக் கைப்பேசியின் வாயிலாகவும் இயக்கலாம்.
கைப்பேசி மூலம் என்பதால், இதனை வீட்டிலிருந்து மட்டுமல்லாமல் வெளியிலிருந்தும் இயக்கலாம். உதாரணத்துக்கு நாம் அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே நம் வீட்டின் ஏசியை ஓட வைக்கலாம். இது மட்டுமின்றி நாம் மறதியில் நிறுத்தாமல் விட்ட சாதனங்களின் செயல்பாட்டை அலுவலகத்திலிருந்தபடியே நிறுத்தலாம்.
சில ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கிகள் இதற்கு ஒருபடி மேலே போய், நாம் வீட்டை நெருங்கும்போது, வீட்டில் இருக்கும் வெப்பத்தின் அளவைச் சொல்லி, ஏசியை ஓட வைக்கவா என்று கேட்கும்.
பயன்கள்
ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கி அடிப்படையில் நமது சவுகரியத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. இதனுடன் ஸ்மார்ட் மானிட்டரையும் சேர்த்து உபயோகித்தால், எந்தச் சாதனம் அதிக மின்சாரத்தை உறிஞ்சுகிறது என்பதை நமக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்கும். நம் வீட்டில் உள்ள அறைகளின் வடிவமைப்புக்கும் வடிவளவுக்கும் ஏற்ப அங்குள்ள சாதனங்கள் இயங்கும் விதமாக அதன் செயல்பாடுகளை அது வடிவமைத்துக் கொள்ளலாம்.
விலை எவ்வளவு?
இந்த வெப்பநிலைச் சீராக்கிகள் அதன் திறன் மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்து ரூபாய் 8,000 முதல் ரூபாய் ஒரு லட்சம் வரையிலான விலையில் சந்தையில் கிடைக்கின்றது. Hive, Nest and Honeywell Evohome, Ecobee போன்ற தயாரிப்புகளின் செயல்பாடுகள் மிகவும் பெயர் பெற்றவை.
நாமே நிறுவ முடியுமா?
சிலவகை வெப்பநிலைச் சீராக்கிகளை நாமே எளிதில் நிறுவிக் கொள்ள முடியும்தான். ஆனால் வீட்டில் உள்ள சாதனங்களை இணைப்பதற்குச் சற்று வயரிங் வேலையும் தேவை என்பதால், தகுந்த தொழில்நுட்ப வல்லுநரைப் பயன்படுத்துவது நல்லது. முறையான தொழில்நுட்ப வல்லுநருக்கு இதனை நிறுவுவதற்கு அதிகபட்சம் ஒரு மணி நேரம்தான் எடுக்கும்.
பணத்தை இது மிச்சப்படுத்துமா?
மின் கட்டணத்தை 30 விழுக்காடு வரை குறைப்பதால் கண்டிப்பாக இது நமது பணத்தை மிச்சப்படுத்தும். இதனை வீட்டில் உள்ள ஸ்மார்ட் Hubல் இணைப்பதன் மூலம், மற்ற ஸ்மார்ட் சாதனங்களுடன் இணைந்து இது செயல்படும். இதன் மூலம் நமது மின்சாரப் பயன்பாடு மேலும் குறைகிறது. நம் சேமிப்பும் அதிகரிக்கின்றது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
4 hours ago