ரத்து செய்யப்பட்ட ரமோன் மகசேசே விருது: ஒரு வரலாற்றுப் பார்வை

By வெ.சந்திரமோகன்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருதுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ‘ஆசியாவின் நோபல் விருது’ என்று அழைக்கப்படும் இந்த உயரிய விருது ரத்துசெய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கும் செய்தி என்றாலும், மக்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவராக வாழ்ந்த ஒரு தலைவரைப் பற்றி நினைவுகூரும் சந்தர்ப்பமாக இதை எடுத்துக்கொள்ளலாம். ஆம், பிலிப்பைன்ஸின் 7-வது அதிபராகப் பதவிவகித்தவரும் ‘வெகுமக்களின் ஆதர்ச ஆளுமை’ (Idol of the Masses) என்று புகழப்படுபவருமான ரமோன் மகசேசேவைப் பற்றி சற்றே நினைவுகூரலாம்.

மக்களில் ஒருவர்
1907 ஆகஸ்ட் 31-ல் பிலிப்பைன்ஸின் சம்பாலிஸ் மாகாணத்தின் இபா நகரில் பிறந்தவர் ரமோன். தந்தை எக்ஸிகுயெல் மகசேசே இரும்பு உருக்குத் தொழில் செய்யும் கொல்லர் சமூகத்தைச் சேர்ந்தவர். தாய் பெர்பெக்டா டெல் ஃபியரோ ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். ரமோனின் தாய்வழித் தாத்தா வசதியான நிலவுடைமையாளர். சற்றே வசதியான பின்னணி என்றாலும் இளம் வயதிலிருந்தே எளிமையான மனிதர்களுடன் பழகுவதையே விரும்பினார் ரமோன்.

அவரது தந்தை எக்ஸிகுயெல் அடிப்படையில் ஒரு போராளியாக இருந்தவர். ஸ்பெயின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிய காடிபுனான் ரகசிய இயக்கத்தில் இருந்தவர். நேர்மையும் கண்டிப்பும் நிறைந்தவராக அறியப்பட்டிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ வரலாற்றாசிரியர் மேக்ஸ் பூட் எழுதிய, ‘தி ரோட் நாட் டேக்கன்’ எனும் நூலில் எக்ஸிகுயெல், ரமோன் இருவரையும் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

பிலிப்பைன்ஸில் அமெரிக்கர்கள் நடத்திய பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்தார் எக்ஸிகுயெல். பள்ளிக் கண்காணிப்பாளர் ஒருவரின் மகனை, விதிமுறைகளுக்குப் புறம்பாகத் தேர்ச்சி செய்ய வேண்டும் எனும் கட்டாயம் ஏற்பட்டபோது அதைக் கண்டிப்புடன் நிராகரித்துவிட்டார். தனது நேர்மை காரணமாகவே அந்தப் பணியை இழக்க நேரிட்டது. அந்த நேர்மை ரமோனிடமும் இருந்தது என்பதை தனது புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார் மேக்ஸ் பூட்.

1939-ல், இரண்டாம் உலகப் போர் தொடங்கிய சமயத்தில், சம்பாலிஸ் மாகாணத்தில், ‘ட்ரை டான்’ எனும் பேருந்துப் போக்குவரத்து நிறுவனத்தில் கிளை மேலாளராகப் பணிபுரிந்த ரமோன், தனது குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தியிருந்தார். எனினும், நாட்டுப்பற்றின் காரணமாக பிலிப்பைன்ஸ் ராணுவத்தில் சேர்ந்தார். கேப்டனாகப் பணிபுரிந்தார். பிலிப்பைன்ஸ் ராணுவம் ஜப்பான் படைகளிடம் தோல்வியடைந்த பின்னர், அமெரிக்க ராணுவத்தினரின் வழிகாட்டுதலில் இயங்கிவந்த கொரில்லா படையில் சேர்ந்து தொடர்ந்து போராடிவந்தார்.

இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற பின்னர், 1946-ல், பிலிப்பைன்ஸ் முழுச் சுதந்திரமடைந்தது. அதே ஆண்டில் அவரது அரசியல் பயணமும் ஆரம்பமானது. லிபரல் கட்சியின் சார்பில் பிலிப்பைன்ஸ் மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 1953-ல், நேஷனலிஸ்டிக்கா கட்சியில் இணைந்த அவர், அதே ஆண்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிலிப்பைன்ஸின் அதிபரானார். அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர், இடதுசாரி இயக்கங்களுக்கு எதிரானவர் என்பவை மகசேசேயின் அடையாளங்களில் முக்கியமானவை. பிலிப்பைன்ஸில் தீவிரமாகச் செயல்பட்ட ‘ஹக்பலஹாப்’ எனும் கிளர்ச்சி இயக்கத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கியவர் அவர்.

அதேசமயம், கிளர்ச்சியின் அடிப்படை வறுமைதான் என்பதை உணர்ந்திருந்த அவர், பிலிப்பைன்ஸ் மக்களின் வறுமையை ஒழிப்பதை லட்சியமாகக் கொண்டு இயங்கினார். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலங்களை வழங்கினார். விவசாயத் துறையில் புரட்சிகரமான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். வாக்குவங்கி அரசியலுக்காக எளிய மக்கள் மீது அக்கறை காட்டிய அரசியல் தலைவர் அல்ல அவர். அது அவரது பிறவிக் குணம் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

மக்களின் குறைதீர்ப்பதற்கென்றே ஒரு அமைப்பை ஏற்படுத்திய அவர், தனது ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லாமல் பார்த்துக்கொண்டார். அதனால்தான், ‘வெகுமக்களின் ஆதர்ச ஆளுமை’ என்று புகழப்பட்டார். எனினும், அவரது நல்லாட்சி நீண்டகாலம் நிலைக்கவில்லை. 1957 மார்ச் 17-ல் அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதில் அவரும், அவருடன் பயணம் செய்த 24 பேரும் உயிரிழந்தனர். அவரது இறுதி ஊர்வலத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மகசேசே விருது
ரமோன் மீது பேரபிமானம் கொண்ட, நியூயார்க்கைச் சேர்ந்த ராக்ஃபெல்லர் சகோதரர்கள், அவரது பெயரில் இந்த விருதைத் தொடங்க விரும்பினர். பிலிப்பைன்ஸ் அரசின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்ட இந்த விருது, அரசுப் பணி, பொது சேவை, சமூகத் தலைமை, இதழிலியல், இலக்கியம் என்று பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களைக் கவுரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.
அன்னை தெரஸா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, சத்யஜித் ராய், அருண் ஷோரி, ஆர்.கே.லக்ஷ்மண், அர்விந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி உள்ளிட்ட ஏராளமான இந்தியர்கள் இந்த விருதைப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுக்கான விருது புகழ்பெற்ற ஊடகவியலாளர் ரவீஷ் குமார் உள்ளிட்ட 5 பேருக்கு வழங்கப்பட்டது.

விமர்சனங்கள்
மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவான இந்தி ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் ரவீஷ் குமாருக்கு இந்த விருது வழங்கப்பட்டபோது இந்தியாவில் உள்ள இடதுசாரிகளும் சுதந்திரச் சிந்தனையாளர்களும் அதை வரவேற்றனர். ஆனால், அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படுபவரும், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராகச் செயல்பட்டவருமான ரமோன் பெயரில் வழங்கப்படும் விருதை இடதுசாரிகள் எப்படிக் கொண்டாடலாம் என்று ஒரு தரப்பினர் விமர்சித்தனர். 2016-ல் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டபோதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன.

எனினும், இடதுசாரி எழுத்தாளர்களில் மிக முக்கியமானவரான மஹாஸ்வேதா தேவி, 1997-ல் இந்த விருதைப் பெற்றுக்கொண்டது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைத் தனது படைப்புகளில் சித்தரித்த அவர், அம்மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டங்களையும் நடத்தியவர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த விருது விழாவில் ஏற்புரையாற்றிய அவர், “இந்த விருது எனக்கு அளிக்கப்படுவதன் மூலம் எனது தேசத்தில் வாழும் பழங்குடி மக்கள், விளிம்புநிலை மக்களின் நிலை பரவலான கவனத்தைப் பெறும். இந்த விருதைப் பெறுவதன் முக்கியத்துவமாக நான் கருதுவது இதைத்தான்” என்று குறிப்பிட்டார். உண்மைதான். உலகம் முழுவதும் விருதுகளின் ரிஷி மூலம் தொடர்பான விமர்சனங்களுக்குக் கணக்கே இல்லை - நோபல் விருது உட்பட!

அந்த வகையில் மிக முக்கியமான ரமோன் மகசேசே இந்த ஆண்டு ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. 1970-ல், பொருளாதார நெருக்கடி காரணமாகவும், 1990-ல், நிலநடுக்கத்தின் காரணமாகவும் இந்த விருது ரத்துசெய்யப்பட்ட வரலாறு உண்டு.

எல்லாவற்றையும் தாண்டி, கரோனாவிலிருந்து மனித குலம் மீளும் என்றும், அதற்காகக் களத்தில் இன்று காரியமாற்றுபவர்களில் யாரேனும் அடுத்த வருடம் மகசேசே விருதைப் பெறுவார்கள் என்றும் நம்புவோம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

சினிமா

24 mins ago

சினிமா

33 mins ago

சினிமா

36 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

34 mins ago

சினிமா

52 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

46 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

மேலும்