ஓபரா பாணியில் ஒரு கரோனா விழிப்புணர்வு பாடல்!

மேற்கத்திய ஓபரா இசை, நடன, நாடக பாணியில் ஒரு கரோனா விழிப்புணர்வுப் பாடலை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி, தன்னுடைய இயக்கத்தில் யூடியூபில் வெளியிட்டுள்ளார் சுகன். வெள்ளம், புயல் போன்ற பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வப் பணிகளை செய்துவருபவர் சுகன்.

அகஸ்டின், பார்த்திபனின் `விடியல் கண்டிடுவோம்’ என்னும் கரோனா விழிப்புணர்வு பாடலுக்கான இசையை ஜீவராஜா வழங்க, பின்னணிப் பாடகர்கள் சுர்முகி, வர்ஷா, முகேஷ், மூக்குத்தி முருகன் ஆகியோர் பாடலை உணர்ச்சிக் கொந்தளிப்போடு பாடியிருக்கின்றனர்.

`கண்ணாடி போன்ற ஒரு வாழ்க்கை…’ என்னும் பல்லவியின் முதல் வரியே வாழ்க்கையின் நிலையாமையைச் சொல்கிறது. ஆனாலும் அடுத்தடுத்த வரிகளில் `கண்ணுக்குத் தெரியாத ஓர் உயிர்க்கொல்லியால்’ நம் வாழ்வாதாரமே முடங்கிப் போயிருப்பதை பட்டியலிட்டுக் கொண்டே, அதற்கு எதிராக களப்பணியில் முன்நிற்கும் நம்முடைய தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் பணியை நன்றியோடு போற்றுகிறது. அதேநேரத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையாக இருப்பதன் அவசியம், முகக் கவசம் அணிவதின் அவசியம் ஆகிவை தொடர்பாக இன்றே நாம் விழித்துக் கொள்வோம்… நாளை விடியல் காணுவோம் என்னும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது பாடல்.

இரக்கம், பரிவு, வேதனை, நம்பிக்கை என பாடுபவர்களின் குரலில் வெளிப்படும் உணர்ச்சி அலைகளை அப்படியே சிந்தாமல் சிதறாமல் தங்களுடைய நடன அசைவுகளின் மூலம் வெளிப்படுத்தி பாடலின் கருத்துக்கு உயிர்கொடுத்திருக்கின்றனர் நடனக் கலைஞர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE