வலைஞர் பக்கம்

குழந்தைமையை நெருங்குவோம்: 3- கலையே விடுதலை; கலையே விடுவிக்கும்

விழியன்

எது உற்சாகம் கொடுக்கின்றதோ, எது வாழ்வின் புரிதலையும் பன்முகத்தன்மையை கொடுக்கின்றதோ அது எல்லாமே கலை தான். கலைக்கான வாழ்க்கைப் பயணம் வாழ்விற்கு வண்ணம் சேர்க்கும். அதுவே ஒரு பயணம் தான்.

கஜா புயல் முடிந்ததும் நானும் எங்கள் குடும்பத்தினர் நால்வரும் காரில் கஜா சென்ற வழியே பயணித்தோம். காரில் ஏராளமான புத்தகங்கள். திருவாரூரில் மையம் கொண்டு அங்கிருந்து பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு புத்துணர்வு முகாம்களை நடத்தினோம்.

பாடல், விளையாட்டு, புத்தக வாசிப்பு என நாட்கள் நிறைந்திருந்தன. குழந்தைகளுடன் கலைகளின் மூலம் பேசுவதும் நெருங்குவது அவ்வளவு இனிமையான அனுபவம்.

கஜா புயலில் கதைகளைக் கேட்க கேட்க மனம் இளகிக்கொண்டே சென்றது. அவர்களில் பலர் வாழ்வையே இழந்திருந்தார்கள். வேதாரண்யத்தை ஒட்டிய பகுதியில் இதே போன்று ஒரு முகாம். குழந்தைகளை கஜா புயலில் நினைவு குறித்து ஓவியம் வரையச்சொன்னோம். குழந்தைகள் வரைந்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். ஓர் ஓவியம் சுத்தமாக புரியவில்லை. சுருள் சுருளாக ஆங்காங்கே இருந்தது.

அந்த மாணவியை அழைத்து என்னவென்று கேட்டால், அது கஜா புயலின் போது அவர்கள் வீட்டுப்பகுதியில் காற்றில் வந்த பாம்புகள் என்றாள். அந்த காட்சி அவள் மனதில் எவ்வளவு ஆழமாக ஊன்றி இருக்கும். நடுங்குகின்றது. ஆம் அங்கே தான் ஒரு கலை நுழைகின்றது. தனக்கு தெரிந்த ஓவியம் மூலம் அந்த இடரான நினைவுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்கின்றாள்.

பூமியின் வரலாறு நெடுக்கவே இதனை நாம் காணலாம். எங்கெல்லாம் ஒடுக்குமுறைகள் வளர்ந்ததோ அங்கெல்லாமே கலையும் இன்னும் வீரியமாக வெளிப்பட்டுள்ளது. அது மக்களை ஒன்றிணைக்கவும் மனதினை பதப்படுத்தவும் பயன்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான கலை என்றதும் நாம் வெறும் ஓவியம், நடனம் என்ற இரண்டில் மட்டும் சிக்கிக்கொள்கின்றோம். ஆனால் அது அப்படி அல்ல. எது ஒன்றில் மனம் லயிக்கின்றதோ, எது ஒன்று செய்யும் போது மனம் பூரிப்படைகின்றதோ, எது உற்சாகம் கொடுக்கின்றதோ, எது வாழ்வின் புரிதலையும் பன்முகத்தன்மையை கொடுக்கின்றதோ அது எல்லாமே கலை தான். கலைக்கான வாழ்க்கைப் பயணம் வாழ்விற்கு வண்ணம் சேர்க்கும். அதுவே ஒரு பயணம் தான்.

குழந்தைகள் எங்கு ஆரம்பிக்கின்றார்கள் என்பது முக்கியம். Coin Collectionல் ஆரம்பித்து நாடுகளின் பெயர்களைப் பரிச்சியமாக்கிக்கொண்டு, அதன் பின்னர் ஏன் நாணயங்கள் இப்படி வடிவமைக்கட்டுள்ளது என்று துவங்கி ஒரு வரலாற்றின் மீது ஆர்வம் கொண்ட நண்பர்கள் உண்டு. இசை, சினிமா, சைக்கிள் பயணம், வாசிப்பு, வான் பார்த்தல், இரவினை தரிசித்தல், புகைப்படம் எடுத்தல் (பார்த்தலும்), ஏன் உரையாடல் கூட கலை தான்.

இதனை குழந்தைகளிடத்தே அவர்களின் சின்ன வயது முதலே விளைவிக்க வேண்டும். ஒரே ஒரு கலை தான் என்று அவசியம் இல்லை. அவர்களுக்கான கலைகள் அவர்களே நிர்ணயிப்பார்கள்.

ஆனால் அதற்கான முயற்சிகளை பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டும். இதில் ஆசிரியர்களின் பங்கும் அவசியம். எல்லா பெற்றோர்களாலும் இதனை முயன்று பார்க்க முடியாது. மிக முக்கியமாக ஒரு கலை தனக்கு பிடிக்குமெனில் அடுத்த கட்ட வழிகாட்டுதல் அவசியம்.

ஓவியம் வரையும் குழந்தைகள் ஒரே நிலையில் நின்றுவிடுவார்கள். அதற்கு அடுத்த அடுத்த கட்டம் என்ன, எங்கே நம்ம ஊரில் ஓவியங்கள் உள்ளன, சமகாலத்தில் ஓவியங்களின் போக்கு, நம்ம நாட்டு ஓவியர்கள், என்னென்ன பொருட்களை பயன்படுத்துகின்றார்கள், நம்ம ஊரில் கண்காட்சி எங்கே எப்போது நடைபெறுகின்றது என அகல விரிந்துகொண்டே போகவேண்டும். இங்கே ஓவியம் ஒரு உதாரணம் தான்.

மிக முக்கியமாக கலை ஒருவனை தாங்கிப்பிடித்துக்கொள்ளும். தன் இடர் காலங்களில் அது ஆசுவாசம் கொடுக்கும். குறிப்பாக வளர் இளம்பருவத்தில் ஒருவருக்கு தக்க துணையாக நிற்கும்.

அதுவே ஒரு குழந்தையை தனித்துவமாக்கும். நாம் தினசரிகளில் தோல்விகளால் தற்கொலை அல்லது வன்முறை சம்பவங்களை பார்க்க நேரிடுகின்றோம். குழந்தைகள் ஏதேனும் தோல்விகளைச் சந்தித்தால் அது தேர்வாகட்டும், உறவுகள் சம்பந்தப்பட்டதாகட்டும் மற்ற எந்த ஏமாற்றமாகவேனும் ஆகட்டும்.

அவர்களை தாங்கிப்பிடிக்க, மனம் வேறு ஒன்றில் ஊன்றி புத்துணர்ச்சியுடன் வெளி வர அந்த கலை உதவிடும்.

இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களாகிய நமக்கும் தேவையான ஒன்று. புதுப்புது விஷயங்களை அது நமக்கு ஈன்றுகொடுக்கும். அந்த அனுபவம் அலாதியானது. நிச்சயம் நம் வாழ்விலும் குழந்தைகளின் வாழ்விலும் அது வண்ணங்களை சேர்க்கும்.

வரலாறு நெடுகவே இடர்களின் போது கலை மனிதர்களை விடுவித்துள்ளது. இதோ இந்த மருத்துவப்பேரிடரின் சமயத்திலும் நாம் கலையை கெட்டியாக பிடித்துக்கொண்டு விடுவித்துக்கொள்வோம்.

விழியன் (சிறார்களுக்கான எழுத்தாளர்)

SCROLL FOR NEXT