முகவரி சொல்லாமல் முகந்தனை மறைக்கும் காதலின் மற்றொரு கோரமுகம்! 

By குமார் துரைக்கண்ணு

வானத்தின் நீலத்தை அப்பிக் கொண்ட மனசு முழுக்க பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும். மேகக் கூட்டத்துக்குள் புகுந்தவிட்டதைப் போல போர்த் தொடுக்கும் பேரலைகள் இதயத் துடிப்பை இரட்டிப்பாக்கும். காதல் வந்த தினத்திலிருந்து காற்று கணமாகும். வெயில் உறைய வைக்கும். மழை அனலடிக்கும். மொழி மவுனிக்கும். மவுனம் மொழியாகும். இப்படியாக இன்னும் சில பத்திகளைக்கூட எழுதி சிலாகித்துக் கொள்ளலாம். சங்க காலம் துவங்கி இன்ஸ்டா காலம் வரை, இலக்கியங்களும், சினிமாவும் ஏற்றிவிட உச்சத்தில் சிம்மாசனமிட்டிருக்கிறது காதல்.

ஆனால், யதார்த்தத்தில் காதல் என்னவாக இருக்கிறது? காதலை மனித சமூகம் என்னவாக உள்வாங்கியிருக்கிறது என்றால், நினைத்துப் பார்க்கவே முடியாத ரணங்களின் சுவடுகளே விஞ்சுகிறது. இலக்கிய மேற்கோள்களைக் காட்டி பூதாகரப்படுத்தப்பட்ட சினிமாக்களில் காதல் வாழ்ந்தது, வாழ்கிறது, வாழும். இனம், மொழி, சாதி, பருவம், பாலினம், என பாகுபாடற்றது காதல். இந்த வேறுபாடுகளை எல்லாம் களைந்து இந்தச் சமூகம் காதலை இன்னும் வாஞ்சை கொள்ளவே இல்லை என்பதுதான் உண்மை.

பூமர்ஸ்... இது 2கே கிட்ஸ்களின் காலம். முந்தி மாதிரியெல்லாம் இப்போது கிடையாது என்றால், ஏமாற்றம்தான் மிச்சமாகும். குலப் பெருமையும், ஆதிக்க மனோபாவமும் சுய விருப்பு வெறுப்புகளால் கட்டமைக்கப்பட்ட மனிதர்களின் மண்ணில், காதல் சுவாசிக்கவே சிரமப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு பல சம்பவங்களை உதாரணங்களாக கூறலாம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் நடைபெற்ற சில இரக்கமில்லாச் சம்பவங்கள், காதல் மீதான ஆதிக்கத்தின் கொடூரமான கோரமுகத்தைக் காட்டுகின்றன.

கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் துலுக்வேலி பகுதியைச் சேர்ந்த தம்பதி சேகர் - தேன்மொழி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு சக்திவேல், சதீஷ், சரவணன் மற்றும் சரண்யா (23) என 4 குழந்தைகள். சரண்யா சென்னையில் 4-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். தனது தாய் தேன்மொழி உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் திருவண்ணாமலை மாவட்டம் பொன்னகர் பகுதி சின்னதெருவைச் சேர்ந்த மோகன் (26) என்ற இளைஞரின் தாயும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்.

சிகிச்சை முடிந்து பின்னரும், சரண்யா மோகன் இருவரின் காதலும் செல்போன் வழி வேரூன்றுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணம் முடிந்து, இருவரும் கும்பகோணத்தில் உள்ள சரண்யாவின் வீட்டுக்கு செல்கின்றனர். அப்போது, சரண்யாவின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மைத்துனர் ரஞ்சித் ஆகியோர், சரண்யா மற்றும் மோகனை வெட்டி கொலை செய்து விடுகின்றனர். திருமணமான 5 நாட்களில் நடந்த இந்தக் கொடூர கொலை தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டம், முருகேசன் நகர் 1-வது தெருவைச் சேர்ந்த வசந்த குமார் என்பவரது மகன் மாரி செல்வம் (24) தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதே ஊரின் திரு வி.க.நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரது மகள் கார்த்திகா (20). கார்த்திகாவும் - மாரி செல்வமும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மாரி செல்வம் குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதனால், இந்தக் காதலுக்கு கார்த்திகா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, கார்த்திகா - மாரி செல்வம் கோவில்பட்டியில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். ஒரே சாதியாக இருந்தாலும், வர்க்க ரீதியான பாகுபாடு , மாரிசெல்வம் - கார்த்திகா காதல் தம்பதியை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிச் சாய்த்து, தனது கோபத்தை தணித்துக் கொண்டது. இந்த வழக்கிலும் காவல் துறை குற்றவாளிகளை கைது செய்திருக்கிறது. இன்ஸ்டாவிலும், ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், சாக்லேட்களும், ரோஸ்களும், மனதை உருக்கும் பாடல்களின் பின்னணியில் நிரம்பி வழிந்தாலும், சமூகத்தின் உண்மை நிலை இதுவாகத்தான் இருக்கிறது.

இந்தச் சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போது, தலைத் துண்டித்து கொல்லப்பட்ட பொறியியல் மாணவர் கோகுல் வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் இடம்பெற்றிருந்த இந்த பத்திதான் நினைவுக்கு வருகிறது...

"குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சாதி என்கிற பேயின் பிடியில் இருந்துள்ளனர். இந்த வழக்கு மனித நடத்தையின் கருப்புப் பக்கத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. சாதிய அமைப்பு, மதவெறி, விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த மக்களை மனிதத்தன்மை அற்ற முறையில் நடத்துவது போன்ற நம் சமூகத்தின் அசிங்கமான அம்சங்களின் மீது கவனத்தை ஈர்க்கிறது. வழக்கை சீர்குலைக்க சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறுவது, ஊடகம் மற்றும் சமூக வலைதளத்திலிருந்து வரும் அழுத்தம், அதிக அளவிலான மின்னணு ஆதாரங்களை ஆராயும்போது வரும் தொழில்நுட்ப சம்பவங்களுக்கு மத்தியில்தான் இந்த வழக்கு நடத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தது.

சரண்யா - மோகன் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மாரிசெல்வம் - கார்த்திகா இருவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் இந்த சமூகம் அவர்களை வாழ அனுமதிக்கவில்லை. பூமி என்பதை தூராமாக்கி, நட்சத்திரங்களைப் பக்கமாக்கிவிடும் காதலில் வீழ்வதற்கு சிந்தனைகள் ஒத்துப்போகும் இரண்டு மனங்கள் போதுமானது என்கிறது இலக்கியமும், சினிமாவும்.

ஆனால், களத்தில் சாதி, பொருளாதாரம், சொந்தபந்தங்கள், மானம் மரியாதை என விதவிதமான கத்திகளைச் சுமந்தபடி காதலுக்கு எதிரான கோரமுகங்களைக் காட்டி சிரிப்பதுதான் நடைமுறையில் தொடர்கிறது என்பதே நிதர்சனம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

உலகம்

10 hours ago

வாழ்வியல்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்