இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. நாம் பின்பற்ற இருக்கும் கொள்கை, நாம் பயணிக்க இருக்கும் பாதை குறித்து பிரதமர் நேரு, ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தார். அன்று அவர் வகுத்த அந்தக் கொள்கை அந்தப் பாதைதான் இன்றளவும் இந்தியாவை உலக அரங்கில் தனித்து வைத்துள்ளது.
1949 ஆகஸ்ட் 15 அன்று ஜவஹர்லால் நேரு ஆற்றிய சுதந்திர தின உரையின் பெரும் பகுதி, இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை விளக்குவதாகவே இருந்தது. அது பற்றிப் பார்ப்பதற்கு முன்பாக… இடையிடையே மகாத்மா பற்றிக் குறிப்பிடத் தவறவில்லை.
“முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் திரையில் ஒரு வலிமையான மனிதர் தோன்றி நமது பாதையில் வெளிச்சம் பாய்ச்சினார். நமது இதயங்கள், சிந்தனைகள் அவரால் ஒளிர்ந்தன. ஏராளமானோர், தமது சொத்து சுகங்களை விட்டு அவரது அழைப்பை ஏற்று பின் தொடர்ந்தனர். யாருக்கும் தனிப்பட்ட ஆதாயம் எதுவும் இல்லை. தாய்நாட்டுக்குப் பணி புரிவதில் யார் முந்துவது என்கிற போட்டியே நிலவியது.”
இந்தக் கருத்தை, தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பல்துறை வல்லுநர்கள், சிந்தனையாளர்கள்… என்று பலர் பலமுறை வியந்து வியந்து கூறியிருக்கிறார்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிகச் சிறந்த அம்சம் இதுதான் – தன்னனலம் சிறிதும் இன்றி, நாட்டு நலனுக்காக, அற வழியில் போராடத் தாமாக மக்கள், லட்சக்கணக்கில் கூடினர்; களத்தில் இறங்கி அடக்குமுறையை எதிர் கொண்டனர்; மனமுவந்து தாக்குதலை ஏற்றுக் கொண்டு அஹிம்சை நெறியில் இருந்து வழுவாது நின்றனர்.
இன்று.. வதந்தியாய் சிறு பொறி எழுந்தாலும் காட்டுத்தீயாய்க் கலவரம் சுட்டு எரிக்கிறது. கன்ணிமைக்கும் நேரத்தில் வன்முறை வெடித்து, தனது கோர முகத்தைக் காட்டி விடுகிறது. ஆனால், அறிவியல் வளராத அறியாமை அகலாத சமுதாயத்தில், ஆங்காங்கே பல்லாயிரம் பேரை ஒன்றுகூட்டி, அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரே திசையில் ஒரே மனநிலையுடன் செயல்பட வைத்து, அஹிம்சை வழியில் போராட வைத்தது - மனிதகுல வரலாற்றில் ஓர் அதிசய அத்தியாயம்.
தானே களத்தில் நின்று போராடியவர் ஆயிற்றே… தனது சுதந்திர தின உரையில் அகிம்சைப் போராட்டம், அது ஏற்படுத்திய நேர்மறைத் தாக்கம் குறித்த அவரது உணர்வுகள் வெளிப்படத்தானே செய்யும்..?
தொடர்ந்து மூன்றாவது முறையாக, நாட்டு மக்களுக்கு இருக்க வேண்டிய அகன்ற இதயம், அறிவார்ந்த அணுகுமுறை குறித்து நேரு வலியுறுத்திப் பேசினார். உள்ளுக்குள் அவருக்கு எப்போதுமே ஒருவித ‘அச்சம்’ இருந்து வந்துள்ளது. மகாத்மா காந்தி இல்லாது, சுதந்திர இந்தியாவில் இத்தனை பெரிய ஜன சமூகத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்து நாட்டைக் காப்பது பெரிய சவாலாக இருக்கும் என்று நேரு கருதியதாகத் தோன்றுகிறது. அதனால்தான், 1949-லும், தனது உரையில் கூறுகிறார்:
“அற்பத்தனமான கேள்விகள், சிரமங்களுடன் நம்முடைய சிந்தனையை மோத விட்டு, மிக முக்கியமான பிரச்சினைகளை நாம் மறந்து போய் விடலாகாது”. (“We must not let our minds get entangled in petty questions and difficulties and forget the main issues.”) இதையே அப்படியே, சில நிமிடங்கள் கழித்து மீண்டும் குறிப்பிடுகிறார்:
“நம்முடைய பிரச்சினைகளை நாம் சரியான புரிதலுடன் நோக்க வேண்டும். அற்பத்தனமான பிரச்சினைகளில் மூழ்கி விட்டால், பெரிய முக்கியமான பிரச்சினைகளில் தோல்வி அடைந்து விடுவோம்.” (“We must look at our problems in a proper perspective. If we are preoccupied with petty problems, we shall fail to solve the larger and more important ones.”)
அரசமைப்பு சட்டம் உருவாக்கலில் நிர்ணய சபை முனைந்து செயல்பட்டு வருவதாய்க் குறிப்பிடும் நேரு, சட்டங்கள் மட்டுமே ஒரு நாட்டை உயர்த்தி விடாது. மக்களின் உற்சாகம் அர்ப்பணிப்பு, இடைவிடாத கடின உழைப்பு – இவையே முக்கியம் என்கிற கருத்தையும் பதிவு செய்கிறார்.
சரி… இனி நாம் 1949 உரையின் மையப் புள்ளிக்கு வருவோம். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் நேரு. உரையின் பெரும் பகுதி அதைப் பற்றியே இருக்கிறது. சற்றும் குழப்பம் இல்லாமல், மிகத் தெளிவாக ‘இப்படித்தான் இருக்கப் போகிறோம்’ என்று எல்லாருக்கும் புரியும்படி, எளிமையாய் அதே சமயம் ஆழமாய் எடுத்துரைக்கிறார்.
(போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைய தலைமுறையினர், அரசியல் அறிவியல் பாடம் படிப்போர், பத்திரிகயாளர்கள், விமர்சகர்கள்.. அனைவரும் இந்த உரையைத் தவறாமல் மனதில் கொள்ளவும். இந்தியாவின் அயலுறவுக் கொள்கையைப் பொறுத்தமட்டில் - ‘இதுவன்றி வேறில்லை’. எந்தப் பீடிகையும் இன்றி நேரடியாக இப்படித் தொடங்குகிறார்:
“எந்த அதிகாரப் பிரிவோடும் சேர மாட்டோம். எல்லா நாடுகளோடும் நட்புடன் ஒத்துழைப்புடன் செயல்பட முயல்வோம்.” (”We shall join no power bloc and endeavour to co-operate and be friendly with all countries”). எல்லாக் காலத்துக்கும் பொருந்தி வருகிற அறிவுரை நல்குகிறார் நேரு -
“நம்முடைய பிரச்சினைகளுக்கு உதவி தேடி மற்றவரை நாடக் கூடாது; நம்மையே நாம் சார்ந்து இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மறந்து விடக் கூடாது.”
“அதிகமாய் மற்றவர் மீது சாய்ந்து இருக்கும் எவரும் நாளடைவில் வலுவிழந்தவர்களாய் உதவியற்றவர்களாய் ஆகி விடுவார்கள். ஒரு நாடு, தனது சொந்த வலிமை, தற்சார்பு மூலமாக மட்டுமே தனது சுதந்திரத்தைக் காத்துக் கொள்ள முடியும்.” {“Those who lean too much on others become weak and helpless themselves. A country’s freedom can be preserved only by her own strength and self-reliance.”)
(ஒரு நினைவூட்டல் – ‘தனது சொந்த வலிமை மூலமே தனது சுதந்திரத்தைக் காத்துக் கொள்ள முடியும்’. ’மகளிர் பாதுகாப்பு’ குறித்து, ஏறத்தாழ இந்தக் கருத்தையே திருக்குறள் வலியுறுத்துகிறது:
சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை. (57 – வாழ்க்கைத்துணை நலம்)
பிரதமர் உரைக்குத் திரும்புவோம். நமது நிலையை மற்றவர்களுக்கு எடுத்து இயம்புகிறார் நேரு: (இனி வருவன அனைத்தும் – இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றிய இந்திய அரசின் அதிகாரபூர்வ வழிகாட்டு நெறிமுறைகள் எனலாம். இதன் மீதுதான் நமது கொள்கை கட்டமைகப்பட்டு உள்ளது. எனவே ஆங்காங்கே ஆங்கிலத்தில், உரையில் உள்ளவாறே தரப் பட்டுள்ள வாசகங்களை இளைஞர்கள் மனப்பாடம் செய்து கொள்வது மிக நல்லது.)
“எந்த நாட்டின் மீதும் நமக்குப் பகையுணர்வு இல்லை; மற்றவர்களின் (உள்)பிரச்சினைகளில் நாம் தலையிடப் போவதில்லை.” (”We are not hostile to any country and we do not want to meddle in other people’s affairs”)
“ஒவ்வொரு நாடும், தனக்கு மிகச் சரி என்று கருதும் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள, சுதந்திரம் பெற்றதாய் இருத்தல் வேண்டும்.” (“Every nation should be free to choose the path it considers best.”)
”நாம் பிற நாடுகளின் சுதந்திரத்தில் தலையிட மாட்டோம். மற்றும், நமது சுதந்திரத்தைப் பற்றி அவர்களும் இதுபோன்றே உணர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.” (”We do not wish to interfere with the freedom of other nations and we expect them to feel the same about our freedom.”)
“எங்களுடைய சொந்த யோசனைகளின்படி முன்னேற விழைகிறோம். இந்தக் கொள்கையைப் பின்பற்றுவது என்று நாங்கள் தீர்மானித்துள்ளோம். இது, எங்கள் நாட்டின் பார்வையில் சிறந்தது என்பது மட்டுமல்ல; உலக அமைதிக்கு உதவவும் இதுதான் ஒரே வழி என்று தோன்றுகிறது.” (“We intend to
progress according to our own ideas. We have decided to follow this policy, not only because it is essentially a sound one from our country’s point of view but also because it seems to be the only way to serve the cause of world peace.”)
“எங்களுடைய சுதந்திரத்துக்கு பங்கம் வராது பாதுகாக்கிற போதே, பிற நாடுகளுடன் நட்புறவை விரும்புகிறோம். ஒரு நாட்டுடன் நாம் கொண்டுள்ள நட்புறவைப் பிறிதொரு நாட்டுக்கு எதிரானது என்று பொருள் கொள்ளக் கூடாது.” (“Keeping our own freedom intact, we wish to befriend other nations. Our friendship with one country should not be interpreted as hostility to another.”)
“இந்த உலகம் பல விதமானது. இந்தப் பன்மையை சிதைத்தல், அல்லது தனது சிந்தனையை, செயலைத் திணித்தல் யாருடைய தொழிலாகவும் இருக்க முடியாது. உலக நடப்புகளை நாம் சரியான புரிதல், எல்லாருடனும் தோழமை என்கிற நோக்கில் ஆய்வு செய்தல் வேண்டும்.” (“The world has a great deal of variety and it should be no one’s business to suppress this variety or to impose ways of thinking and acting on others. We should therefore survey world events in a spirit of understanding and friendship to all.”)
“உலக அமைதிக்கான நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய உறுதியாய் இருக்கிறோம். இதுவே நமது வெளியுறவுக் கொள்கைக்கான விளக்கம்.” {“We are determined to make every possible effort in the cause of peace. That explains our present foreign policy.”}
இத்தனை விரிவாக இந்த அளவுக்குத் தெளிவாக எந்த நாட்டுத் தலைவரும் எடுத்துச் சொன்னதாகத் தெரியவில்லை. நேருவைப் பொருத்த மட்டில். அயலுறவுக் கொள்கை – அவரது மனதுக்கு மிக நெருக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது. அதிலும், எல்லா நாடுகளோடும் எல்லா நாட்டு மக்களோடும் இந்தியா மிக நெருங்கிய இணக்கமான உறவு வைத்து இருக்க வேண்டும் என்பதில் உண்மையான ஆழ்ந்த அக்கறை கொண்டு இருந்தார்.
பிற நாட்டு மக்களை, அவர்களின் சுதந்திரத்தை நேரு எந்த அளவு நேசித்தார்..? இந்த ஒரு வாசகம் போதும். நேருவின் முத்திரை வாச்கம் எனலாம். அது… இதோ:
“எந்த நாடும் மற்ற நாட்டின் மீது சுதந்திரத்தைத் திணிக்க முடியாது” (“No country can impose freedom on any other.”)
ஆஹா… யார் மீதும் யாரும் சுதந்திரத்தைத் ‘திணிக்க’ முடியாது!
இந்த சிந்தனைதான் – நேரு!
(தொடர்வோம்)
முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 2 - வழிகாட்டும் அணையா விளக்கு | 1948
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
29 days ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago