கலை

சென்னை ஓவிய இயக்கம் குறித்த உரையாடல்

ஷங்கர்

சென்னை நுண்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் மூத்த ஓவியருமான சந்ரு முதல் இளம் ஓவியர் கிருஷ்ணப்ரியா வரை ஒன்பது ஓவியர்கள் சேர்ந்து உருவாக்கிய இயக்கம் கருப்பு ஆர்ட் கலெக்டிவ்.

கருப்பு என்ற சொல், நம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் ஒரு நிறம் மட்டுமே அல்ல. அது இருளையும், விடியலுக்கு முன்னான மூட்டத்தையும், ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்ப்பையும் குறிக்கும் சொல் . கருப்பு ஆர்ட் கலெக்டிவ் இயக்கத்தின் சார்பாக கடந்த 15ஆம் தேதி, சோழமண்டலத்தில் பத்திரிக்கையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் வீட்டில் லிஸ்ப் ஆஃப் சில்ரன் என்ற தலைப்பில் ஒன்பது ஓவியர்களின் படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன. அபராஜிதன் ஆதிமூலம், சந்ரு, எபனேசர் சுந்தர் சிங், கிருஷ்ணப்ரியா, மரிய அந்தோணிராஜ், மைக்கேல் இருதயராஜ், நடேஷ் முத்துசாமி, நரேந்திரன், சர்மிளா மோகன்தாஸ் ஆகியோரது ஓவியங்களும், இன்ஸ்டலேஷன் படைப்புகளும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. டிசம்பர் 28 ஆம் தேதிவரை இந்தப் படைப்புகள் பார்வைக்கு இருக்கும். இந்தக் கண்காட்சியின் ஒரு அங்கமாக தொடக்கநாள் அன்று, சென்னை ஓவிய இயக்கத்தின் தற்போதைய நிலை குறித்த உரையாடல் அரங்கும் நடைபெற்றது.

இந்த உரையாடல் நிகழ்ச்சியில் கலை விமர்சகர் சதானந்த் மேனன், ஏ.எஸ்.பன்னீர்செல்வன், ஓவியர் ஆர்.எம்.பழனியப்பன் மற்றும் ஓவியர் சந்ரு ஆகியோர் பேசினார்கள்.

சதானந்த் மேனன், சென்னை ஓவியர்கள் சேர்ந்து உருவாக்கிய சோழமண்டலத்தில் ஆரம்பகாலகட்டத்தில், குறைந்த வசதிகள் இருந்த நிலையிலும் கூட்டுணர்வுடன் செயல்பட்டதை நினைவூட்டினார். தற்போது அனைத்து ஓவியர்களும் தனித்தனி தீவுகளாக இருக்கும் நிலையைச் சுட்டிக்காட்டிய மேனன், பொது பிரச்னைகளில் கூட ஒன்றுபட இயலாத நிலை இப்போதிருப்பதை விமர்சித்தார். கலைஞர்கள் சேர்ந்து இயங்கமுடியாத சூழலில் தான் மோடி போன்ற பாசிசத் தலைமை இந்தியாவில் உருவாகிறது என்பதை அவர் நினைவுபடுத்தினார். இந்தியாவில் தற்போது நாடகக் கலைஞர்களும், ஆவணப்பட இயக்குனர்களும் கலைசார்ந்த அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக இயங்குவது ஆறுதலாக இருக்கிறது என்றும் கூறினார்.

அடுத்துப் பேசிய பன்னீர் செல்வன், கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து இயங்கக் கூடிய பொதுவெளிகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்துக் கூறினார். கலைச் செயல்பாடுகளுக்கு அரசு நிறுவனங்கள் ஆதரவு தராத நிலையில், தனிப்பட்ட நபர்கள் தங்கள் இடங்களை பொதுவெளியாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஓவியர் சந்ரு, இந்திய ஓவியத்தில் தொடர்ந்து நடக்கும் உருவவாதம்-அரூபவாத விவாதங்களை அவசியமற்றதென்று கூறினார். இரண்டு உருவங்கள் இருக்கும்போதுதான், அதற்கு நடுவில் இருக்கும் அரூபம் நமக்குப் புலனாகிறது என்று குறிப்பிட்டார்.

சென்னை ஓவிய இயக்கத்தில் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் மொழிகளைப் பேசும் படைப்பாளிகள் பங்களிப்பு செய்துள்ளனர். இருப்பினும் அவர்கள் தமிழ் மரபிலிருந்தும், அழகியல் சார்ந்தும் தங்கள் படைப்புகளில் சில பொது அம்சங்களையாவது வெளிப்படுத்தினார்கள். இதைக் குறிக்கும் வகையில்தான் சென்னை ஓவிய இயக்கம் என்று அது அறியப்படவும் செய்கிறது. ஆனால் சென்னை ஓவிய இயக்கம் சார்ந்த உரையாடல் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றது சிறிது உறுத்தலாகவே இருந்தது.

SCROLL FOR NEXT