Published on : 16 Jan 2025 17:47 pm
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
திரிவேணி சங்கமத்தில் சுமார் 1.50 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர்.
2-வது நாளில் நடைபெற்ற முதல் ‘அம்ரித் ஸ்நானம்’ நிகழ்ச்சியில் திரிவேணி சங்கமத்தில் 3.5 கோடி பேர் புனித நீராடியதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
திரிவேணி சங்கமத்தில் முதல் 2 நாட்களில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியுள்ளது.
அடுத்த முக்கிய புனித நீராடல் நிகழ்ச்சி வரும் 29-ம் தேதி மவுனி அமாவாசை நாளில் ‘ஷாகி ஸ்நானம்’ என்ற பெயரில் நடைபெறுகிறது. அன்றைய தினம் 8 முதல் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 3-ம் தேதி பசந்த் பஞ்சமி தினத்தில் 3-வது ஷாகி ஸ்நானம் நிகழ்ச்சி நடைபெருகிறது.
பிப்ரவரி 12-ம் தேதி மாகி பூர்ணிமா தினம், பிப்ரவரி 26 மகா சிவராத்திரி ஆகிய தினங்களில் முக்கிய புனித நீராடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அத்துடன் மகா கும்பமேளா நிகழ்ச்சி நிறைவடைகிறது.
உலகெங்கிலும் இருந்து 40 கோடிக்கும் அதிகமானோர் மகா கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 26-ம் தேதி வரை ஒன்றரை மாத காலம் இந்த ஆன்மிகப் பெருவிழா நடைபெற உள்ளது.
கோடிக்கணக்கில் பக்தர்கள் குவிவதால் 4,000 ஹெக்டேர் பரப்பளவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
1.60 லட்சம் கூடாரங்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மெகா திருவிழாவுக்காக ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வருட கும்பமேளாவால் உ.பி. அரசின் பொருளாதாரத்துக்கு பெரிய அளவில் ஊக்கம் கிடைக்கும் என்பது வல்லுநர்களின் கணிப்பு.
மகா கும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்கள் காணாமல் போனால் அவர்களை எளிதில் கண்டறிய இங்கு அமைக்கப்பட்டுள்ள 50,000 மின் கம்பங்களில் க்யூ.ஆர் கோடு வசதி செய்யப்பட்டுள்ளது.
மகா கும்பமேளாவில் தரமான உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை கண்டறிய நடமாடும் உணவு பரிசோதனை கூடங்களும் உள்ளன. இங்கு உணவுப் பொருட்களின் தரம் பரிசோதிக்கப்படுகின்றன.
மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள் திரிவேணி சங்கமத்துக்கு எளிதில் சென்று திரும்புவதற்கான வழிகள் மற்றும் தகவல்களை https://kumbhlocator.esri.in/ என்ற இணையதள ஆப் தொடங்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்தியாவின் மிகப் பெரிய ஆன்மிக சங்கமமான கும்பமேளாத் திருவிழாவை சர்வதேச சமுகம் வியந்துப் பார்க்கிறது.