Published on : 18 Nov 2023 20:14 pm
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவினை முன்னிட்டு சனிக்கிழமை மாலையில் சூரசம்ஹார லீலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டிவிழா நவ.13ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதனையொட்டி தினமும் காலை மாலையில் சண்முகார்ச்சனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆறாம் திருநாளான இன்று காலையில் யாகசாலை பூஜை முடிந்து, உச்சிகால பூஜை முடிந்த பின்னர், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமியும், வெள்ளைக்குதிரை வாகனத்தில் வீரபாகுத்தேவரும் கோயிலுக்குள் மண்டபத்தில் எழுந்தருளினர். மாலை 4 மணிக்கு தீபாராதனை முடிந்து கோயிலுக்குள் மண்டபத்தில் எழுந்தருளினர்.
அசுரர்களை வதம் செய்வதற்கு புறப்பட்டு சன்னதி வீதியில் சொக்கநாதர் கோயில் முன்பாக தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமியும், வெள்ளைக்குதிரை வாகனத்தில் வீரபாகுத் தேவரும் எழுந்தருளினர். பின்னர் மாலை 6 மணியளவில் பத்மாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பின்னர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் முடிந்து மாலை மாற்றிக்கொண்டனர். தீபாராதனை முடிந்து சுவாமி பூச்சப்பரத்தில் எழுந்தருளினர்.அதனைத் தொடர்ந்து (நவ.19) தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
தகவல்: ஜனநாயக செல்வம் | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி