Published on : 04 Feb 2023 17:54 pm
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. | படங்கள்: நா.தங்கரத்தினம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பழநியில் குவிந்து வருவதால் பழநி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தந்தப் பல்லக்கு, தங்க மயில் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
விழாவின் ஆறாம் நாளில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
தொடர்ந்து இரவு 9 மணிக்கு மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமி வெள்ளித்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயில் இணை ஆணையர் நடராஜன், அங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்று தைப்பூசத்தை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தை காண ஏராளமானோர் பழநிக்கு வந்த வண்ணம் இருந்ததால் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.