Published on : 26 Feb 2025 13:49 pm
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு விழா கொண்டாட்டம் புதன்கிழமை (பிப்.26) காலை தொடங்கியது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வரும் 2,500-க்கும் மேற்பட்ட தவேக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வழிநெடுகிலும் விஜய்க்கு தவெக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். கிடக்குழி மாரியம்மாளின் நாட்டுப்புற பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த மும்மொழி கொள்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையில் கையெழுத்திட்டு, #GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
மேடைக்கு அருகே மும்மொழி கொள்கையையும், மத்திய, மாநில அரசுகளையும் விமர்சிக்கும் வாசகங்களுடன் #GetOut கையெழுத்து பதாகை வைக்கப்பட்டிருந்தது. அதில் தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்டு #GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அடுத்து தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கையெழுத்திட்டார். அந்தப் பதாகையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்த வீடியோ வைரலானது.
தவெக பேனரில் இடம்பெற்ற வாசகங்கள்: “ஒருவர் பாட்டுப் பாட, மற்றொருவர் அதற்கு ஏற்ற ஒத்திசைவுடன் நடனமாட திரைமறைவு கூட்டுக் களவாணிகள் இருவரும் தமிழக மக்களின் பிரச்சினைகளை இருட்டடிப்புச் செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து வருகின்றனர். புதிய கல்வி கொள்கை, மும்மொழி திட்ட திணிப்போடு சேர்த்து முக்கிய அவலங்களை எதிர்த்து போராட இவர்களை #GETOUT செய்திட உறுதி ஏற்போம். விமர்சனத்துக்கு அஞ்சி கொடுங்கோலுடன் மக்களின் குரல்களை ஒடுக்கும் கோழைத்தனம்.”
தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதன் ஹைலைட்ஸ்: “1967, 1977 தேர்தல்களை போல ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நாங்கள் 2026 தேர்தலில் உருவாக்குவோம். இந்த அரசியலை பொறுத்தவரை யார், யாரை எதிர்ப்பார்கள் என்று கணிக்கவே முடியாது. இங்கு நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை.”
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை என்று சொல்வார்கள். ஆனால் மக்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்துப் போன ஒருவன் அரசியலுக்கு வருகிறான் என்றால், அதை நல்லவர்கள் எல்லாம் வரவேற்பார்கள். ஒரு சிலருக்கு மட்டும் கொஞ்சம் எரிச்சல் வரத்தானே செய்யும்.
இதுவரை நாம் சொன்ன பொய்யை நம்பி மக்கள் நமக்கு ஓட்டு போட்டார்களே, ஆனால் இவன் சொல்வது மக்கள் மனதுக்கு நெருக்கமாக உள்ளதே, இவனை எப்படி க்ளோஸ் செய்யலாம் என்று நினைக்கின்றனர். அதில் என்ன பேசுவதென்று தெரியாமல், வர்றவன் போறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறான் என்று சொல்கிறார்கள்.
“ஆட்சியில் இருப்பவர்கள் நமக்கு எதிராக பேசுவதைப் போல. இப்படிப்பட்ட ஒரு அரசியல் களத்தில் கொஞ்சம் கூட பயம் இல்லாமல், வரும் எதிர்ப்புகளை இடது கையால் தள்ளிவிட்டு நம்முடைய தவெக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.”
“நம்முடைய மாவட்ட நிர்வாகிகள் எல்லாருமே இளைஞர்களாக இருக்கிறார்கள் என்று சொல்கின்றனர். அண்ணா, எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது அதில் இருந்தவர்கள் இளைஞர்கள்தான். அதுதான் வரலாறு.”
கட்சி நிர்வாகிகள் எல்லாருமே சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் பெரிதாக சாதித்திருக்கிறார்கள். நம் கட்சி பண்ணையார்களுக்கான கட்சி இல்லை. அந்த காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். ஆனால் இப்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாக மாறிவிடுகிறார்கள்.
"மக்களின் நலனை பற்றியோ, நாட்டின் நலனை பற்றியோ கவலையில்லாமல் வெறும் பணம் பணம் மட்டும்தான். இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதுதான் நம்முடைய முதல் வேலை.”
“2026 தேர்தலை நாம் சந்திக்கப் போகிறோம். அதற்கு பூத் ஏஜென்டுகள் மிகவும் முக்கியம். ஆனால் அது பெரிய கட்சிகளுக்குதான் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். கூடிய சீக்கிரமே பூத் கமிட்டி மாநாடு நடத்தப் போகிறோம். தவெக எந்தவொரு பெரிய கட்சிக்கும் சளைத்ததல்ல என்று அன்றைக்கு தெரியவரும்.”
“இப்போது புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டிருக்கிறார்கள். இங்கே அதை செயல்படுத்தவில்லையென்றால் நம் மாநில அரசுக்கு நிதி கொடுக்க மாட்டார்களாம். கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. வாங்க வேண்டியது இவர்களின் உரிமை. ஆனால் எல்கேஜி பிள்ளைகளை போல சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.”
“இங்கே எவ்வளவு பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. நம்ம பாசிசமும் பாயாசமும், அதாவது நம் அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சமூக வலைதளங்களில் ‘ஹேஷ்டேக்’ போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.”
“இவர்கள் அடித்துக் கொள்வது போல அடித்துக் கொள்வார்களாம். இதை நாம் நம்பவேண்டுமாம். ‘வாட் ப்ரோ... இட்ஸ் வெரி ராங் ப்ரோ’. இதையெல்லாம் மக்களுக்கு நாம் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை.”
“நம் ஊர் சுயமரியாதை மிக்க ஊர். நாம் எல்லாரையும் மதிப்போம். ஆனால் சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம்.”
“தனிப்பட்ட முறையில் யாரும் எந்த பள்ளியிலும் படிக்கலாம். எந்த மொழியை வேண்டுமானாலும் விருப்பத்துடன் கற்றுக் கொள்ளலாம். ஆனால்...”
“கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக் குறியாக்கி வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால், அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி? எனவே. தவெக சார்பில் இதனை நாங்கள் உறுதியாக எதிர்ப்போம்” என்று விஜய் பேசினார்.