Published on : 29 May 2023 17:16 pm
தமிழகத்தில் ஊழல், கள்ளச்சாராய இறப்புகள் தொடர்வதாகக் கூறி, அதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். | படங்கள்: என்.ராஜேஷ், எம்.கோவர்த்தனன், என்.பாஸ்கரன்.
தமிழகத்தில் திமுகவின் 2 ஆண்டு கால ஆட்சியில் ஊழல், கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி சென்னையில் கடந்த 22-ம் தேதி அதிமுக சார்பில், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, திமுக அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் கட்சி தலைமை நிர்வாகிகள், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
மேலும், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை கடுமையாக சீர்குலைந்துள்ளது. கள்ளச் சாராயத்தால் ஒரே வாரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிமுக குற்றம்சாட்டியது.
இவற்றைக் கண்டித்தும், முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கட்சி அடிப்படையிலான அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பழனிசாமி பங்கேற்றார். சென்னையில் ஏற்கெனவே பேரணி நடத்தி, ஆளுநரிடம் மனுஅளித்திருப்பதால், சென்னை மாவட்டத்தில் எங்கும் ஆர்ப்பாட்டம் இல்லை என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில், சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.