

பிரியங்கா காந்தி குறித்து விமர்சித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வீட்டின் முன் காங்கிரஸார் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
மதியம் மூன்று மணி அளவில் சுப்பிரமணியன் சுவாமியின் டெல்லி வீட்டின் முன்பு காங்கிரஸார் கூடினர். அவர்கள் பாஜக மற்றும் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘சுப்பிரமணியன் சுவாமி கூறியது தனிப்பட்ட தலைவர் மீதானது அல்ல. தவிர ஓர் அரசியல் குடும்பத்தையே அவர் விமர்சித்துள்ளார். அவர் கூறியது மிகவும் தவறு’ என தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி மீது தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்க இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிட இருந்ததாகவும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அதனை தடுத்துவிட்டனர் என்றும் நாளிதழ்களில் அண்மையில் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, பிரியங்கா காந்தி மது அருந்திய பிறகு நிதானத்தை இழப்பதாகவும் அவர் எடுத்த முடிவு சரியானதே எனவும் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த விவகாரத்தில் பாஜக மவுனம் காத்து வருகிறது. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் மனைவி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்ததற்கு பதிலடியாகவே இது கருதப்படுகிறது.
இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘நான் கூறியதில் காங்கிரஸாருக்கு ஆட்சேபம் இருந்தால் அவர்கள் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுக்கலாம். அதை விடுத்து இப்படி போராட்டம் என்ற பெயரில் பிரச்சினை செய்வது கண்டிக்கத்தக்கது’ எனத் தெரிவித்தார்.