Published on : 11 Jan 2025 18:45 pm

அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு முதல் அமெரிக்க காட்டுத் தீ பாதிப்பு வரை | டாப் 10 செய்திகள்

Published on : 11 Jan 2025 18:45 pm

1 / 10

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - அதிமுக புறக்கணிப்பு: “பிப்வரி 5-ம் தேதி அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது,” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதற்கான காரணங்களையும் அவர் பட்டியிலிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முந்தைய இடைதேர்தல்களைப் போலவே நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், நிர்வாகத் திறனற்ற திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும், பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை, அதிமுக புறக்கணிக்கிறது,” என்று கூறியுள்ளார்.

இதேபோல், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவும் இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. 

2 / 10

ஈரோடு கிழக்கு - திமுக வேட்பாளர் அறிவிப்பு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது. திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, திமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 / 10

காங்கிரஸ் போட்டியிடாதது ஏன்? - “2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் மற்றும் இண்டியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று உறுதிசெய்யப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

4 / 10

7 சிறப்பு நீதிமன்றங்கள் - முதல்வர் அறிவிப்பு: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ‘பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் ஏழு தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும்’ என்று அறிவித்தார். 

5 / 10

சட்டப்பேரவையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றம்: சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் செய்வோருக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வகை செய்யும் இரண்டு சட்ட மசோதாக்கள், தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

6 / 10

சீமானுக்கு தலைவர்கள் கண்டனம்: “ஆர்எஸ்எஸ், சங் பரிவார் கும்பலில் கரைந்து போன சீமான் பெரியாரையும், நாட்டு முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கும் பாடுபட்ட பெரியோர்களையும் இழிவுபடுத்தி அவமதித்து, மூடப்பழக்க வழக்கங்களுக்கு உயிரூட்டும் முயற்சியில் ஈடுபடும் சீமானின் தரம் தாழ்ந்த செயலை கடுமையாக கண்டிக்கிறோம்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

“பெரியாரின் வரலாறும், சாதனைகளும் மிக நீண்டவை. அவற்றை முழுமையாக படிக்காமல், அரைகுறை புரிதலுடன் அவற்றை விமர்சிப்பதை ஏற்க முடியாது. அவரது புகழ் வெளிச்சத்தை அரைகுறை அவதூறுகளால் ஒருபோதும் மறைக்க முடியாது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

“நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்”, என்று சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார்.

7 / 10

விசிக, நாதகவுக்கு அங்கீகாரம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை ஒட்டி விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

8 / 10

திமுகவை கண்டித்து ஜன.20-ல் பாஜக போராட்டம்: அருப்புக்கோட்டை நகரில் புதிய ரயில் பாதையை ரத்து செய்த திமுக அரசை கண்டித்து வரும் 20-ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 

9 / 10

“முதல்வர் ஸ்டாலின் சொல்வது பொய்” - ராமதாஸ்: பிஹார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அந்த மாநில அரசே நடத்தியதாகவும், அதற்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்து விட்டதாகவும் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழக மக்களின் சமூக நீதி சார்ந்த விவகாரத்தில் சட்டப்பேரவையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பட்டமாக பொய் கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

10 / 10

காட்டுத் தீயில் பற்றி எரிகிறது லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படை வீரர்கள் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக 4 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வணிக கட்டிடங்கள், முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. சுமார் பதிமூன்று லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே, இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க காட்டுத் தீ பரவும் இடங்களில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருக்கிறது. திருடர்கள் பலரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். திருட்டுகளை தடுக்க அமெரிக்க தேசிய படையை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Recently Added

More From This Category

x