Published on : 21 Jun 2025 19:46 pm
யாருக்கு அளவுக்கு மீறி ஆத்திரம் வருகிறதோ, கடுகளவும் பொறுமை கிடையாதோ, தோல்வியை, அதிர்ச்சியைத் தாங்கும் துணிவு இல்லையோ...
யாரெல்லாம் சின்ன சின்ன பிரச்சினைக்கெல்லாம் சினம் கொள்கிறார்களோ, யாரெல்லாம் எதற்கெடுத்தாலும் கவலைப் படுகிறார்களோ...
பயம், பதற்றம், போட்டி, பொறாமை, இழப்பு, சோகம், இலக்கு, அழுத்தம் என உணர்ச்சிப் போராட்டங்களால் யாரெல்லாம் தூக்கம் தொலைக்கிறார்களோ...
இவ்வாறாக உணர்ச்சி மிகுதிக்கு இடம் கொடுப்போரையே மாரடைப்புக்கு ரொம்ப ‘பிடிக்கும்’. ஆகவே, அவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதேபோல் நாள்பட்ட புகைப் பழக்கம் மாரடைப்பைச் சீக்கிரமே வரவேற்று கூரியர் அனுப்பும்... எப்படித் தெரியுமா?
புகையிலையில் புதைந்திருக்கும் ‘நிகோடின்’ விஷம் நம் ரத்தக் குழாய்களை நசுக்கி, ‘பி.பி’யை உயர்த்திவிடும்.
கொழுப்பு என்னும் ‘பேரிகார்டு’களைக் கொண்டு வந்து இதயத்துக்குப் போகும் ‘ரத்தச்சாலை’களை அடைத்துவிடும். அப்போது மாரடைப்பு வந்துசேரும்.
அளவில்லாமல் மது குடிப்பது மாரடைப்புக்கு அடுத்த விஷமி. அதேபோல் உடலுழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாத உடம்புக்கும் மாரடைப்பு அபாயம் உண்டு.
மாரடைப்புக்கு முக்கியக் கூட்டாளி ‘உடல் பருமன்’. இருக்க வேண்டிய எடையைவிட 20% அதிக எடை உள்ளவர்களுக்கு மாரடைப்பு சாத்தியம் அதிகம்.
சர்க்கரை நோயும் ரத்தக் கொதிப்பும் மாரடைப்புக்குப் ‘பால்ய’ நண்பர்கள். என்பதால் இவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.