Published on : 13 Feb 2025 19:23 pm
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரத்திலும் அதன் புறநகர் பகுதிகளிலும் ஜிபிஎஸ் எனும் கில்லன் பாரே சிண்ட் ரோம் கொள்ளை நோயாக உருவெடுத்துள்ளது.
இதுவரை 163 பேருக்கு கில்லன் பாரே சிண்ட்ரோம் நோய் பாதித்துள்ளது. இதில் 47 பேர் தீவிர சிகிச்சையிலும், 21 பேர் செயற்கை சுவாசம் தேவைப்படும் நிலையிலும் உள்ளனர்.
கில்லன் பாரே சிண்ட்ரோம் என்பது நமது உடலின் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நோய் நிலையாகும். நரம்புகளில் செயலிழப்பை ஏற்படுத்தி வாதத்தை ஏற்படுத்தும் நோய் இது.
கை, கால்களில் வாதம் ஏற்பட்டுச் செயலிழந்துவிடும். சுவாசிப்பதற்கு உதவும் நெஞ்சுப் பகுதித் தசைகளும் செயலிழந்து சுவாசச் செயலிழப்பு ஏற்பட்டு மரணமும் ஏற்படலாம்.
முதலில் உள்ளங்கை, பாதங்களில் குத்துவது போலவும் சுர்ரென்ற உணர்வும் ஏற்படும்; சில நாள்களில் கை, கால்கள் முழுவதுமாகச் செயலிழக்கும் நிலை ஏற்படும்.
நோயாளி வெளிப்படுத்தும் நோய் அறிகுறிகளை வைத்து மட்டுமே ஜிபிஎஸ் நோயைக் கண்டறிய முடியும். இதற்கென ரத்தப் பரிசோதனையோ வேறு பரிசோதனைகளோ இல்லை.
எவ்வாறு ஏற்படுகிறது? - நமது நோய் எதிர்ப்பு ஆற்றல் நமது நரம்புகளுக்கு எதிராக வினையாற்றுவதால் இந்த ஜிபிஎஸ் நோய் ஏற்படுகிறது.
தடுப்பது எப்படி? - நாம் உண்ணும் உணவு முறையாகச் சமைக்கப்பட்டிருப்பதையும் சூடாகச் சாப்பிடுவதையும் உறுதிசெய்ய வேண்டும்.
காய்ச்சாத கறந்த பாலைப் பருகக் கூடாது. நீரை நன்றாகக் காய்ச்சிப் பருக வேண்டும். நீரைக் காய்ச்ச வழியற்ற நிலையில் தொற்று நீக்கம் செய்த பிறகு பருக வேண்டும்.
உணவை உண்பதற்கு முன்னும், உணவைத் தயாரிக்கும் முன்னும், உணவைப் பரிமாறுவதற்கு முன்னும் கட்டாயம் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.
பழங்கள், காய்கறிகளை நன்றாகக் கழுவி, சுத்தம் செய்தபின் பயன்படுத்த வேண்டும். பச்சையாகச் சாப்பிடுவதாக இருந்தால் அவற்றின் தோல் பகுதியை நீக்கிவிடுவது சிறந்தது.
இதைப் பின்பற்றினால் கேம்பைலோபாக்டர் தொற்றைத் தவிர்த்து அதன் மூலம் ஜிபிஎஸ் நோய் கொள்ளைநோயாக உருவெடுக்காமல் தடுக்க முடியும். | கைடன்ஸ்: டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா