Published on : 25 Jan 2025 19:21 pm
அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஓர் அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் அறிகுறியே அரிப்பு.
உடலியல் ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’.
அரிப்பு ஏற்படும் காரணங்களில் இரண்டு வகை முக்கியானவை. உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.
வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான் போன்ற ஆடைகளால் பிரச்சினை.
சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை தரும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடும் வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும்.
குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு.
காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும்.
உடல் பருமன் இருப்பின் அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி என பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு வரும்.
பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும்.
அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. மனநலன் கூடினால், அரிப்பும் சரியாகும்.
மருத்துவரை அணுகி, காரணம் அறிந்து, உரிய சிகிச்சை பெற்றால்தான், அரிப்பு முற்றிலுமாகக் கட்டுப்படும். நாமாக மருந்து சாப்பிடுவது ஆபத்து.