Chicken Pox facts
Chicken Pox facts

சிற்றம்மை: சில புரிதல்கள்

Updated on
2 min read

சிற்றம்மை (Chicken pox) நோயைத்தான் அம்மை நோய் என்று பொதுவாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த நோயை ‘வேரிசெல்லா ஜாஸ்டர்’ எனும் வைரஸ் கிருமிகள் ஏற்படுத்துகின்றன.

சிற்றம்மை குழந்தைகளையும் சிறுவர்களையும்தான் அதிகம் பாதிக்கும். என்றாலும், பெரியவர்களையும் அரிதாகப் பாதிக்கலாம்.

சிற்றம்மை  பாதிக்கப்பட்டவர்களின் உடலில் தோன்றும் கொப்புளங்கள், மூக்குச் சளி, மூச்சுக் குழல் சளி போன்றவற்றில் வைரஸ் கிருமிகள் இருக்கும். இவை அடுத்தவர்களைத் தொற்றும்.
 

அம்மைக் கொப்புளங்களில் நீர்கோக்கும்போது, நோயாளியுடன் நெருங்கிப் பழகுபவர்களை இக்கிருமிகள் தொற்றும். நோயாளிகளின் உடை வழியாகவும் பரவ வழியுண்டு.

கிருமிகள் உடலுக்குள் புகுந்த 2 முதல் 3 வாரத்துக்குள் நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். சாதாரண காய்ச்சலோடு ஆரம்பிக்கும். பிறகு உடல்களில் தடிப்புகள் தோன்றும்.

3-ம் நாளில் தடிப்புகள், கொப்புளங்களாக மாறும். அவற்றில் நீர் கோக்கும். 7-ம் நாளில் நீர்க் கொப்புளங்கள் சீழ்க் கொப்புளங்களாக மாறும். அடுத்து நோயின் தீவிரம் மட்டுப்படும்.

கொப்புளங்கள் உடைந்தும் உடையாமலும் சுருங்கி, காய்ந்து, பொக்குகளாக மாறி உடலிலிருந்து மறையும். அந்த இடங்களில் தழும்புகள் தெரியும். அவையும் சில மாதங்களில் மறைந்துவிடும்.

சிற்றம்மைக்கு தற்போது சிகிச்சை உள்ளது. ‘ஏசைக்ளோவிர்’ (Acyclovir) எனும் மருந்து மாத்திரையாகவும், மேற்பூச்சுக் களிம்பாகவும் கிடைக்கிறது. இவற்றை பயன்படுத்தினால் உடனே நோய் கட்டுப்படும்.

சிற்றம்மைக்குத் தடுப்பூசி கர்ப்பிணிகள் போடக் கூடாது. VZIG எனும் தடுப்பூசியைப் போட வேண்டும். அப்போதுதான் கருவில் குழந்தைக்கு சிற்றம்மை ஏற்படாது. | தகவல்: மருத்துவர் கு.கணேசன்
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in