Published on : 24 Apr 2023 11:46 am

ஒளிரும் ‘தஞ்சைப் பெரியகோயில்’ எனும் தமிழனின் பெருமை - போட்டோ ஸ்டோரி

Published on : 24 Apr 2023 11:46 am

1 / 15

தஞ்சையில் சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜனால் கி.பி. (பொ.ஆ) 1010ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப் பெற்றதே ‘இராஜராஜீச்சரம்’ எனும் சிவாலயமாகும். இதை மக்கள் வழக்கில் தஞ்சைப் பெரிய கோயில் எனக் குறிப்பிடுவர். இக்கோயில் கடைக்காலில் தொடங்கி விமானத்துச் சிகரம்வரை கருங்கற்கள் கொண்டே கட்டப்பெற்றதாகும். அதனால் இதனைக் கற்றளி எனக் குறிப்பிடுவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி காலகட்டத்தில் பாமர மக்கள் இதனைப் பூதம் கட்டிய கோயிலென்றே கூறி வந்தனர்.

2 / 15

தஞ்சையில் ஆட்சிபுரிந்த மராட்டிய அரசர் சரபோஜி மன்னரின் ஆட்சிக் காலத்தில் மராட்டி மொழியில் எழுதப் பெற்ற தஞ்சைபுரி மான்மியமும் வடமொழியில் எழுதப்பெற்ற பிரகதீசுவர மகாத்மியம் என்ற புராணமும் கிருமி கண்ட சோழன் எனும் கரிகாலனால் இக்கோயில் கட்டப்பெற்றது என்றும், அவனுக்கு இருந்த குட்ட நோய் இங்குள்ள சிவகங்கையில் நீராடியதால் நீங்கியது என்றும் கூறுகின்றன. இது அறியாமையால் பிழைபட கூறப்பெற்றதாகும்.

3 / 15

ஜி.யு.போப் என்ற பாதிரியார் தஞ்சையில் இருந்தபோது எழுதி வெளியிட்ட சிறு நூல் ஒன்றில் காடுவெட்டி சோழன் என்பவன் இக்கோயிலைக் கட்டினான் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி புரியும்போது சென்னை அரசாங்கம் கி.பி. 1886 இல் ஹூல்ஷ் (HULTZH) என்ற ஜெர்மன் நாட்டு அறிஞரைக் கல்வெட்டு ஆய்வாளராக நியமித்தது. அவர் தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுக்கள் பலவற்றை படி எடுத்து அவற்றைப் படித்தார்.

4 / 15

அவரால் படி எடுக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் அனைத்தும் ‘தென்னிந்திய கல்வெட்டுக்கள்’ தொகுதி இரண்டாக, கி.பி. 1892இல் வெங்கையா என்பவரால் பதிப்பிக்கப் பெற்றது. பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் பலவற்றில், "பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருகற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்.." என்ற மாமன்னன் ராஜராஜ சோழனின் வாய்மொழிக் கூற்று பதிவுபெற்றுள்ளதை அவர் உலகுக்கு அறிவித்தார். பின்பே அக்கோயில் சோழப் பேரரசன் முதல் ராசராசனால்தான் கற்கோயிலாக எடுப்பிக்கப் பெற்றது என்பது பலராலும் அறியப் பெற்றது.

5 / 15

தமிழர் கட்டிடக் கலையின் உச்சம்: தமிழர் கோயில் கட்டிடக் கலையின் உச்சக்கட்ட வெளிப்பாடாகத் திகழ்வது தஞ்சைப் பெரிய கோயிலேயாகும். ஆங்கிலேய அரசு காலத்தில் கல்லணையிலிருந்து புதிதாக வெட்டப்பெற்ற கல்லணைக் கால்வாய் எனப் பெறும் புது ஆற்றின் வடகரையில் நீர் அகழியும் பெரும் மதிற்சுவரும் சூழ நடுவில் தஞ்சைப் பெரியகோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலைகளுடன் 110 அடி உயரத்தில் அமைந்த இக்கோபுரத்தின் உட்புற மேற்தளக் கட்டுமானம் வியப்புக்குரியதாகும்.

6 / 15

சுவரில் மர உத்திரங்களைப் பதித்து அதற்கு மேலாகச் செங்கற்களைப் படுக்கை வசத்தில் சுண்ணாம்புக் காரை கொண்டு ஒட்டி தளத்தினை உருவாக்கி இருக்கிறார்கள். கேரளாந்தகன் திருவாயிலில் நாம் நுழையும்போது இருபுறமும் இரண்டு பெரிய ஒற்றைக்கல் நிலைக்கால்கள் இருப்பதைக் காணலாம்.

7 / 15

4 அடிக்கு 4 அடி சதுரமும் 40 அடி உயரமும் உடையதாக இந்த இரு நிலைக் கால்களும் விளங்குகின்றன. பெருங்கற்களை வெட்டி எடுக்கக்கூடிய மலைகள் ஏதும் இல்லாத மருத நிலப் பகுதியான தஞ்சைக்கு இவ்வளவு பெரிய நிலைக் கால்களை குறைந்த மதிப்பீட்டில் 80 கிலோமீட்டர் தொலைவுடைய புதுக்கோட்டை மாவட்டத்து மலைப்பகுதிகளிலிருந்துதான் கொண்டு வந்திருக்க வேண்டும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

8 / 15

நாற்பது அடி உயரமுடைய ஒற்றைக்கல் நிலைக்கால்கள் இரண்டை 90 டிகிரி செங்குத்தாக நிறுத்தி அதன்மேல் மிகப் பெரிய உத்திரக்கல்லை அமைத்து அதன் மேல் கோபுரத்தை எழுப்பியுள்ளனர். இது கட்டிடக்கலையின் மகத்தான சாதனையாகும். நாற்பதடி உயர நிலைக்கால்களின் மேல் குறுக்காக அமைக்கப்பெறும் கல்லின்மேல்தான் கோபுர வாயிலின் நீண்ட நெடும் மரக்கதவுகள் வாயிலை மூடும் போது வந்து அணையும். சோழர்காலக் கோயில் ஒன்றில் உள்ள கல்வெட்டொன்று இந்த உத்திரக்கல்லுக்கு ‘கதவணை’ எனப் பெயர் குறித்துள்ளது.

9 / 15

ராஜராஜன் திருவாயில்: இக்கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும் போது கிழக்கு இரண்டாம் ராஜ கோபுரம் காட்சியளிக்கிறது. இவ்வாயிலை இங்குள்ள கல்வெட்டுக்கள் ராஜராஜன் திருவாயில் என்று குறிக்கின்றன. ராஜராஜன் என்ற பெயர் அருண்மொழி என்ற இயற்பெயரையுடைய சோழ மன்னனுக்கு மகுடம் சூட்டும் போது ராஜகுருவால் சூட்டப்பெற்ற அபிஷேக நாமமாகும். அதுவே பின்பு நிலைபெற்றது.

10 / 15

90 அடி உயரமும் மூன்று நிலைகளும், கொண்டு திகழும் ராஜராஜன் திருவாயில் எனப் பெறும் இக்கோபுரம் முழுதும் கருங்கற்கட்டுமானமாக விளங்குகின்றது. இக்கோபுர கட்டுமானத்தின் அடித்தள அமைப்பான உபபீடம் எனும் பகுதியில் சிவபுராணக் கதைகள், கண்ணப்பர் வரலாறு போன்றவை சிற்பக் காட்சிகளாக உள்ளும் புறமும் இடம்பெற்றுள்ளன. உபபீடத்துக்கு மேலாக அதிஷ்டானத்திலிருந்து கபோதகம் வரை உள்ள சுவர்ப்பகுதியில் பெரும் வாயிலின் இருபுறமும் இரண்டு துவாரபாலகர் எனப்பெறும் வாயிற்காவலர் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

11 / 15

ஏறத்தாழ பதினெட்டடி உயரமுடைய இவ்விரண்டு சிற்பங்களும் பிரம்மாண்டமானவையாகும். இங்கு எட்டு பிறை மாவட்டங்களில் எட்டு வசு தெய்வங்களின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. நான்கு கரங்களுடன் திகழும் வாயிற் காவலன் ஒருவனின் காலடியின் கீழே பாம்பு ஒன்று ஒரு புழுவினைப் போன்று காணப்பெற்று அப்பாம்பு யானை ஒன்றின் உடலில் பெரும் பகுதியை விழுங்கி நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த யானையை உண்மையான யானை அளவு நாம் கற்பனை செய்து பார்த்தால் பதினெட்டடி உயரமுடைய வாயிற்காவலன் சிற்பம் மட்டுமே நூறு அடி உயரமுடையதாகத் தோன்றும்.

12 / 15

லிங்கத் திருமேனி: இந்த இரண்டாம் கோபுரத்துடன் இணைந்து திருமதிலும் அதன் உட்புறம் அம்மதிலுடன் இணைந்தவாறு திருச்சுற்று மாளிகையும் காணப்பெறுகின்றன. இந்த திருச்சுற்றுமாளிகையில் 36 பரிவார ஆலயங்கள் எனப்பெறும் சிறு கோயில்கள் இடம் பெற்றுள்ளன. நெடிதுயர்ந்த விமானம் 216 அடி உயரமுடையது. கருவறையின் நடுவில் 13 அடி உயரமும் 55 அடி சுற்றளவையும் கொண்ட லிங்கத் திருமேனி இடம்பெற்றுள்ளது. இந்த லிங்கத் திருமேனியைச் சுற்றி காணப்பெறும் நான்குபுற சுவர்களும் பதினொரு அடி கணமுடையவை.

13 / 15

அச்சுவர்களுக்கு வெளியே சுற்றிலும், ஆறு அடி அகலத்தில் ஒரு சுற்று அறை உள்ளது. அது சாந்தாரம் என அழைக்கப் பெறுவதாகும். வெளியிலிருந்து பார்க்கும்போது பிரமிட் வடிவில் தோன்றும் இந்த விமானம் ஒரு குவளையைத் தலைகீழாகக் கவிழ்த்தது போல் உட்கூடாகத் திகழும். தமிழக ஆடற்கலையின் ஓராயிரம் ஆண்டுகால வரலாற்றை எடுத்துக்காட்டும் வண்ணம் இவ்வாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள சிற்பங்களிலும், ஓவியங்களிலும் தமிழ்நாட்டு ஆடற்கலையின் சிறப்புக்கூறுகளை நாம் காணலாம். மேலும் சிவபெருமான் ஆடற்கலையை கற்பிக்க ஆடியதாகக் கூறப்பெறும் நூற்றி எட்டு கரணங்களின் சிற்பங்கள் விமானத்து மேற்தள சாந்தார அறையில் பெருமானே ஆடிக்காட்டும் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன.

14 / 15

தமிழர் மரபின் பெருமை: நாளும் இந்த ஆலயத்தில் பண்ணிசையோடு தேவாரத் தமிழ்பாட நாற்பத்து எட்டு பிடாரர்களையும் இரண்டு இசைக் கருவிகள் வாசிப்பவர்களையும் நியமித்ததை மன்னவனின் கல்வெட்டே எடுத்துக் கூறுகிறது.

15 / 15

உலகமே வியக்கும் ஒப்பற்ற இந்த ஆலயத்தை வடிவமைத்த தலைமைத் தச்சனான வீரசோழன் குஞ்சரமல்லன் என்பவனுக்கு ராஜராஜ பெருந்தச்சன் என்ற பட்டத்தையும், அவனுடைய உதவியாளர்களான மதுராந்தகனுக்கு நித்தவிநோத பெருந்தச்சன் என்ற பட்டத்தையும், இலத்திசடையனுக்கு கண்டராதித்தப் பெருந்தச்சன் என்ற பட்டத்தையும் சூட்டி மகிழ்ந்த மாமன்னன் ராஜராஜன் அத்தகவலை தஞ்சைக் கோயிலில் கல்வெட்டாகவும் பொறித்துச் சென்றுள்ளார். தமிழர் தம் மரபுப் பெருமையின் வெளிப்பாடே தஞ்சைப் பெரிய கோயிலாகும். | கட்டுரையாளர் - குடவாயில் பாலசுப்ரமணியன் | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

Recently Added

More From This Category

x