Published on : 16 Jan 2025 11:12 am
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்தப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். உதயநிதியுடன் அவரது மகன் இன்பநிதியும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்துள்ளார். அவர்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் வரவேற்பு நல்கினர். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
துணை முதல்வர் உதயநிதி மேடைக்கு வந்த பின்னர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. கோயில் காளைகளுக்கு துணை முதல்வர் வழங்கும் தங்கக்காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக, மாடுபிடி வீரர்கள் அமைச்சர், ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளைகளுக்கு கார், டிராக்டர், ஆட்டோ, பைக், தங்க காசு என்று விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளதால், இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெற்றியையும், பரிசுப் பொருட்களையும் தாண்டி, இந்தஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் களம் காணுவதையே, காளை வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும் பெருமையாக கருதுவார்கள்.
அதனால், ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூரில் காளைகளை இறக்கவும், காளைகளை அடக்க களம் காணவும் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்களிடம் கடும் போட்டி நிலவும். இந்த ஆண்டு சுமார் 1,000 காளைகள், 750 மாடுபிடி வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.
போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று அழைத்துவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றும், அதிகாலை முதலே கால்நடை துறை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகே வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படுகின்றன. முதல் சுற்றில் வீரர்கள் மஞ்சள் நிற சீருடை அணிந்து களம் காண்கின்றனர்.
நடிகர் சூரியின் மாடு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மாடு ஆகியன களத்தில் அவிழ்த்துவிடப்பட்டு வெற்றி பெற்றன. வெற்றி பெறும் மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் துணை முதல்வர் தங்கக் காசுகளை பரிசாக வழங்கி வருகிறார்.