Published on : 07 Feb 2025 16:50 pm
‘வேலியன்ட்’ (Valiant) என்னும் தலைப்பில் இசைஞானி இளையராஜாவின் ‘சிம்பொனி’ மார்ச் 8-ல் லண்டன் - அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக அரங்கேறுகிறது.
இந்தியாவின் முதல் சிம்பொனி வெளிவரவுள்ள நிலையில், ‘சிம்பொனி’ பயணம் குறித்து இளையராஜா பகிர்ந்தவற்றில் இருந்து...
“நான் ஏற்கெனவே திரையிசையில் சிம்பொனி வடிவத்தைப் பயன்படுத்தியிருக்கிறேன். அதன் வழியாக சிம்பொனி குறித்து மக்களுக்குக் கற்பித்திருக்கிறேன்.”
‘தளபதி’யின் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலின் பின்னணி இசையைக் கவனித்தீர்கள் என்றால், அதில் சிம்பொனி வடிவம் உள்ளது.
‘ஓ பிரியா பிரியா’, ‘என் இனிய பொன் நிலாவே’, ‘நினைவோ ஒரு பறவை’, ‘மடை திறந்து’ போன்ற எனது பாடல்களில் சிம்பொனியின் அம்சங்கள் ஆங்காங்கே தொனிக்கும்.
“பிரான்ஸ் ஷுபர்ட்டை நான் நகல் எடுத்துவிட்டதாகக்கூடச் சிலர் கூறுகின்றனர். திரைப் பாடல்களை இயற்றும்போது அவரது இசை என் மனத்துக்குள் ரீங்காரம் இட்டது உண்டு.”
“ஷுபர்ட்டின் இசை எனக்குள் உத்வேகத்தை ஊட்டியதே அன்றி, அதற்கும் எனது படைப்புக்கும் நேரடித் தொடர்பில்லை.”
“கர்னாடக இசையில் பல்லவி, அனுபல்லவி, சரணம் போல சிம்பொனிக்கு தனித்துவமான வடிவம் உள்ளது. பிரத்யேக விதிகளும் ஒழுங்குமுறைகளும் உள்ளன.”
“உணர்வதே ஒன்றைக் குறித்த அறிவுக்கு அடிப்படை. எனவே, சிம்பொனியை ரசிக்க உணர்வே முக்கியம். சிம்பொனி எல்லாருக்குமானது அல்ல. இது வித்தியாசமானது.”
“பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 6 சிம்பொனி இசைக் குழுக்கள் இந்தியாவில் இருந்தன. இன்றோ அதுபோன்ற ஒரே ஒரு சிம்பொனி இசைக் குழுகூட இந்தியாவில் இல்லை.”