Published on : 04 Feb 2023 20:51 pm

மாற்று இல்லாத மகத்தான பாடகர் வாணி ஜெயராம்! - புகழஞ்சலி குறிப்புகள்

Published on : 04 Feb 2023 20:51 pm

1 / 17

பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 78. அவரது மறைவையொட்டி திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

2 / 17

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “திறமையான வாணி ஜெய்ராம் ஜி, பல்வேறு மொழிகளை உள்ளடக்கிய மற்றும் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு படைப்புலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.

3 / 17

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற வாணி ஜெயராம் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.பழம்பெரும் பின்னணிப் பாடகியான வாணி ஜெயராம் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வாணி ஜெயராமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்

4 / 17

பாடகர் வேல்முருகன்: “நாளை அவரைக் காணயிருந்தேன். ஆனால், இப்படி நிகழ்ந்துவிட்டது. வசீகரிக்கும் குரலுக்குச் சொந்தக்காரர். பத்ம பூஷண் வாங்கும் இந்த நேரத்தில் அவரின் மறைவு இசைத் துறைக்கு மிகப் பெரிய இழப்பு. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.”

5 / 17

பின்னணி பாடகர் மனோ: “பத்ம பூஷண் விருதுக்கு தகுதியுள்ள அற்புதமான பாடகர் வாணியம்மா. அவருடன் இணைந்து நிறைய பாடல்களை பாடியுள்ளேன். ஒரு பெரிய விருது வாங்குவதற்கு முன் இப்படி நடந்துவிட்டது என்பதை தாங்க முடியவில்லை. நம்ப முடியாத செய்தி இது. அற்புதமான தேன் குரலுக்கு சொந்தக்காரர் அவர். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவரது ஆன்மா சாந்தியடைய வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

6 / 17

குஷ்பு: “நாம் அனைவரும் உன்னதமான ஒருவரை இழந்துவிட்டோம். பல வருடங்களாக நம்மைக் கவர்ந்த ஒரு குரல் இன்று நம்மை நொறுங்கச் செய்துவிட்டது. அவரின் இனிமையான, மென்மையான இயல்பு குரலில் பிரதிபலித்தது. நீங்கள் என்றும் நினைவில் இருப்பீர்கள் அம்மா” என பதிவிட்டுள்ளார்.

7 / 17

ராதிகா: “வாணி ஜெயராம் மறைவு செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.நேற்று இரவு தான் அவரது பாடலை கேட்டுவிட்டு, கே.விஸ்வநாத் சார் படத்தில் அவர் பாடலை எவ்வளவு அழகாக பாடுகிறார் என்று என் கணவரிடம் கூறினேன். இந்தச் செய்தி பேரதிர்ச்சி” என பதிவிட்டுள்ளார்.

8 / 17

இசையமைப்பாளர் டி.இமான்: “பழம்பெரும் பாடகர் வாணி ஜெயராம் அம்மா இப்போது இல்லை என்ற கடினமான யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "மாலை" படத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் அவரை சந்தித்து பாடலை பதிவு செய்தேன். அவர் இன்று இல்லை என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல்.” என தெரிவித்துள்ளார்.

9 / 17

பின்னணி பாடகர் சித்ரா: “வாணி அம்மாவின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவரிடம் பேசினேன். வலுவான கிளாசிக்கல் அடித்தளத்துடன் கூடிய பல மொழி பாடகர் அவர். ஆன்மா சாந்தியடையட்டும்.” என தெரிவித்துள்ளார்.

10 / 17

இசையமைப்பாளர் ஜிப்ரான்: “பழம்பெரும் பாடகர் பத்ம பூஷண் வாணி ஜெயராம் மறைவு தமிழ் இசை உலகுக்கு உண்மையிலேயே மிகப் பெரிய இழப்பு. அவர் தனது குரலின் மூலம் ஏராளமான பாடல்களை விட்டுச் சென்றுள்ளார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.”.

11 / 17

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: “வாணி ஜெயராம் அம்மாவின் மறைவுச் செய்தி கேட்டு மன வேதனையாக இருந்தது. அவரது மதிமயக்கும் குரலை மிஸ் செய்வேன். சொந்தமாக ரெக்கார்டிங் ஸ்டுடியோவை உருவாக்க அவர் என்னை ஊக்குவித்ததை என்னால் மறக்க முடியாது.”

12 / 17

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்: “மிகச் சிறந்த பல்துறை இந்தியப் பாடகர்களில் ஒருவர், 'பத்ம பூஷண்' ஸ்ரீமதி வாணி ஜெயராமை இழந்துவிட்டோம். 5 தசாப்தங்களுக்கும் மேலாக தனது ஆத்மார்த்தமான மற்றும் இனிமையான குரலால் இசை ஆர்வலர்களை ஈர்த்தவர். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.”

13 / 17

அமமுக பொதுச் செய்லாளர் டி.டி.வி.தினகரன்: “வசீகரிக்கும் குரலால் தமிழர்களின் மனதைக் கட்டிப் போட்ட பிரபலப் பின்னணிப் பாடகர் வாணி ஜெயராம் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த திரைப்படங்களில் பாடி சிறப்பு சேர்த்தவர். அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உற்றார் உறவினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

14 / 17

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் உண்டோ அத்தனையும் பாடி நம்மையெல்லாம் மகிழ்வித்த இசைக்குயில் வாணி ஜெயராம் அவர்கள் மறைவுச் செய்தி மனத்துயர் அளித்தது. இந்தியாவின் இதய கமலமாக, பத்ம பூஷன் என்று வாழும் காலத்தில் விருது வழங்கிக் கொண்டாடப்பட்ட வாணி ஜெயராம். அவர்களின் இழப்பு இசை உலகின் பேரிழப்பு. அவரின் ஆன்மா அமைதி பெற வேண்டுகிறேன்.”

15 / 17

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: “பிரபல பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும்,மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. தனது இனிமையான குரல் வளத்தால் அனைவரும் மனதிலும் இடம்பிடித்த வாணி ஜெயராம் அவர்களுக்கு அண்மையில் மத்திய அரசு பத்ம பூஷண் விருது அறிவித்து கௌரவித்தது. அவரது இழப்பு இசை ரசிகர்களுக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.”

16 / 17

கமல்ஹாசன்: “வார்த்தைகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பது போன்றதொரு அரிய பாணியில் எத்தனையோ பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம் அம்மையார் அமைதியடைந்திருக்கிறார். அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கும். அவருக்கென் அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.

17 / 17

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி: “இசைக்கலைஞர் வாணி ஜெயராம் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. திரையிசை, இந்துஸ்தானி, கர்நாடக இசை என ஐம்பதாண்டுகளுக்கு மேலாகப் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் தந்த இணையில்லாப் பாடகரான அவரது மறைவு இந்திய இசை உலகிற்குப் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் கலைத்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

Recently Added

More From This Category

x