Published on : 26 Jun 2025 19:05 pm
‘ஆக்சியம் 4’ திட்டத்தின் கீழ் பால்கன் - 9 ராக்கெட் மூலம் சென்ற இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் வியாழக்கிழமை சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர்.
இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், சர்வதே விண்வெளி மையத்துக்கு பால்கன் - 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புதன்கிழமை புறப்பட்டனர்.
ராக்கெட்டில் இருந்து அவர்கள் சென்ற டிராகன் விண்கலம் பிரிந்து விண்வெளிப் பயணத்தை தொடங்கியது. இந்த டிராகன் விண்கலத்துக்கு ‘கிரேஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் 28 மணி நேர பயணத்துக்குப்பின் சர்வதேச விண்வெளி மையத்தில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு இணைந்தது.
டிராகன் விண்கலத்தில் வந்த 4 வீரர்களையும், சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்கெனவே தங்கி ஆய்வு பணி மேற்கொண்டு வரும் குழுவினர் கட்டியணைத்து வரவேற்றனர். அவர்களுக்கு குளிர்பான பாக்கெட்டுகளை கொடுத்தனர்.
புவியீர்ப்பு விசை அற்ற சூழலை உடனடியாக அறியும் வகையில், டிராகன் குழுவினர் தங்களுடன் ‘ஜாய்’ என்ற வாத்து மொம்மையையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர்.
விண்கலம் புவியீர்ப்பு விசை அற்ற சூழலில் நுழைந்ததும் இந்த ஜாய் மிதக்கத் தொடங்கியது.
இந்த பயண அனுபவம் குறித்து ஷுபன்ஷு சுக்லா கூறும்போது, “புவியீர்ப்பு விசை அற்ற சூழலில் விண்கலப் பயணம் தொடங்கியதும், சீட்டில் இருந்து பின்நோக்கி சென்றது போல் இருந்தது” என்றார்.
“பூமியில் இருந்து விண்வெளி நோக்கிய விரைவு பயணம் அருமையாக இருந்தது. விண்வெளியில் நுழைந்ததும் திடீரென அமைதி நிலவி ஒன்றுமே இல்லாதது போல் இருந்தது” என்று விவரித்தார்.
மேலும், “சீட் பெல்ட்டை அகற்றியதும் வெற்றிடத்தில் மிதந்தோம். விண்வெளி பயணத்தில் நான் நன்றாக தூங்கியதாக உடன் பயணித்தவர்கள் கூறினர்” என்றார்.
“புவியீர்ப்பு விசை அற்ற சூழலில் இருக்க பழகிக் கொண்டேன். ஜன்னல் கண்ணாடி வழியாக தெரியும் காட்சிகளை ரசித்தேன். விண்வெளி பயணத்தை ஒரு குழந்தை கற்றுக் கொள்வதைப் போல் அனுபவித்து மகிழ்ந்தேன்” என்றார்.
அத்துடன், “வெற்றிடத்தில் எப்படி அடி எடுத்து வைப்பது, நடப்பது, சாப்பிடுவது என்பதை கற்றுக்கொண்டிருக்கிறேன். இது அருமையான அனுபவமாக உள்ளது.புதிய சூழல், புதிய சவால். இந்த அனுபவத்தை என்னுடன் பயணிப்பவர்களுடன் சேர்ந்து அனுபவித்து வருகிறேன்” என்று சுக்லா தெரிவித்துள்ளார்.
டிராகன் விண்கலம் தரையிறங்கியவுடன், இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்தார்.
உத்தர பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர் ஷுபன்ஷு சுக்லா. கடந்த 1985-ம் ஆண்டு பிறந்த இவர், 2006-ல் இந்திய விமானப்படையில் பைலட்டாக சேர்ந்தார்.
2019-ம் ஆண்டு விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் ரஷ்யாவின் யூரி காகரின் விண்வெளி மையத்துக்கு இவர் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விண்வெளி மையம் சென்றுள்ள இந்தக் குழுவினர், இஸ்ரோவின் 7 அறிவியல் சோதனைகளுடன் சுமார் 60 பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் 2 வாரம் காலம் தங்கியிருக்கும் இந்தக் குழுவினர் ஆய்வுகளை முடித்துவிட்டு டிராகன் விண்கலத்தில் பூமி திரும்புவர்.
விண்வெளி பயணம் மேற்காண்ட முதல் இந்தியர் ராகேஷ் சர்மா. இவர் கடந்த 1984-ம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். அதன்பின் 41 ஆண்டுகளுக்குப்பின் விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இந்தியர் ஷுபன்ஷு சுக்லா என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ராகேஷ் சர்மாவின் நினைவாக ஒரு பொருளையும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதை விண்வெளி பயணத்தை முடித்து பூமி திரும்பியபின் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.