Published on : 23 Jun 2025 17:32 pm
சென்னை மெரினா கடற்கரைக்கு ‘நீலக்கொடி சான்றிதழ்’ பெறும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி சார்பில் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, கடற்கரை பகுதிகளில் மூங்கிலால் ஆன நிழல் கூரைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் அமைக்கபட்டு வருகின்றன. | படங்கள்: ம.பிரபு
உலகின் பல்வேறு கடற்கரைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை, கடற்கரை தூய்மை, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மதிப்பீடு செய்து, டென்மார்க்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை, சிறந்த கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கி வருகிறது.
நீலக்கொடி சான்றிதழ், சர்வதேச அளவிலானது என்பதால், இச்சான்றிதழ் பெறும் கடற்கரைப் பகுதிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதுடன், அங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பதால் உள்ளூர் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும்.
தமிழகத்தில் ஏற்கெனவே கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில்தான் சென்னை மெரினா, திருவான்மியூர் உள்ளிட்ட 6 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் இப்போது வேகமெடுத்துள்ளன.
சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே, ரூ.5.60 கோடியில் மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபாதை, சைக்கிள் தடங்கள், விளையாட்டுப் பகுதி, கண்காணிப்பு கோபுரம், 360 டிகிரியில் சுழலும் கண்காணிப்பு கேமரா, திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் போன்றவற்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது, சென்னை மெரினா கடற்கரையில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளன. செடிகளும் நடப்பட்டு வருகின்றன.
மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூங்கில் மூலம் தயாரிக்கப்பட்ட நிழல் தரும் கூரைகள், ஓய்வு நாற்காலிகள், குப்பைத் தொட்டிகள் மற்றும் சோபாக்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்காக 4 சக்கர நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன.