Published on : 12 Jun 2025 19:04 pm
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. | படங்கள்: விஜய் சோனேஜி
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை மதியம் 1.38 மணிக்கு புறப்பட்டது ஏர் இந்தியாவின் 171 என்ற போயிங் ரக விமானம். கேப்டன் சுமித் சபர்வால், துணை விமானி கிளைவ் குந்தர் ஆகியோர் விமானத்தை இயக்கினர்.
போயிங் 787-8 ட்ரீம்லைனர் எனும் இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் பிரிட்டன் நாட்டையும், 7 பேர் போர்ச்சுகீஸ் நாட்டையும், ஒருவர் கனடாவையும் சேர்ந்தவர்கள்.
விமானம் 1.38 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதன்பின் சில நிமிடங்களிலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தின் முன்பகுதி, அகமதாபாத் மேகனிநகர் பகுதியில் பிஜே மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவர்கள் விடுதியின் கூரையின் மீது விழுந்தது.
பயங்கர வெடிச்சத்தத்துடன் விமானம் விழுந்ததை அடுத்து, தீ மளமளவென்று பற்றி எரிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். பல மீட்டர் தொலைவுக்கு கரும்புகை வெளியேறியது.
204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 41 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அகமதாபாத் மாநகர காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் தெரிவித்துள்ளார்.
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்: அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்த தகவலை மத்திய அமைச்சர் சி.ஆர் பாட்டீல் உறுதி செய்துள்ளார். தனது மகளை சந்திக்க அவர் இன்று மதியம் லண்டன் புறப்பட்டதாக தகவல். பிசினஸ் கிளாஸ் பிரிவில் அவர் விமானத்தில் பயணித்தார்.
விமான விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது, “மதியம் நான் வீட்டில் இருந்தேன். அப்போது திடீரென பலத்த சப்தம் கேட்டது. அது ஏதோ பயங்கரமான வெடி விபத்து போல இருந்தது. முதலில் பூகம்பமாக இருக்கும் என நான் நினைத்தேன். தொடர்ந்து என்னவென்று பார்க்க வீட்டில் வெளியே வந்தேன். வானுயர கரும்புகை எழுந்திருந்ததை பார்த்தேன். பின்னர் வீட்டில் இருந்து இங்கு வந்து பார்த்தபோது விபத்தில் சிக்கிய விமானத்தின் சிதறிய பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்கள் இருந்தன. அது மிகவும் அதிர்ச்சி அளித்தது” என அவர் கூறியுள்ளார்.
ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி வருகின்றன. இதில் அகமதாபாத் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி தொடர்பான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் விடுதி சுவர் சுக்குநூறாக உடைந்து அறை முழுவதும் சிதறிக் கிடப்பது தெரிகிறது.
விடுதியில் உள்ள உணவு மேஜைகளில் சாப்பிடாமல் விடப்பட்ட உணவுத் தட்டுகளை காண முடிகிறது. இது, மருத்துவ மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் விடுதிக் கட்டிடம் மீது விமானம் மோதியதை காட்டுகிறது. மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘மே டே’ - விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானியிடம் இருந்து “மே டே” என்ற அவசர அழைப்பு வந்தது. அதன்பிறகு, லண்டன் செல்ல வேண்டிய அந்த விமானத்திலிருந்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு (ஏடிசி) எந்த தொடர்பும் கிடைக்கவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.
போயிங் நிறுவனத்தின் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 14 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு சுமார் 1,000 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதில் எந்த விமானமும் விபத்தில் சிக்கியதில்லை.
பெரிய விமானங்களில் வேகமாக செல்லக் கூடியது இந்த வகை விமானம். இந்த ரக விமானம் எரிபொருளையும் 25 சதவீதம் மிச்சப்படுத்தும். இந்த ரக விமானத்தில் இதுவரை 100 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
மிகவும் பாதுகாப்பான விமானமாக கருதப்பட்ட போயிங் ட்ரீம்லைனர் விமானம், தற்போது முதல் முறையாக மேலே எழும்ப முடியாமல் தரையிறங்கி விபத்தில் சிக்கியுள்ளது. இதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மேலே எழும்ப தேவையான உந்துதல் கிடைக்காமல் தடுமாறியது வீடியோ பகுப்பாய்வின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
உயிர் பிழைத்த ஒருவர் - இந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இதை அகமதாபாத் போலீஸ் கமிஷனர் ஜி.எஸ்.மாலிக் உறுதி செய்துள்ளார். “11ஏ இருக்கையில் பயணித்த பயணி ஒருவரை போலீஸார் உயிரோடு இருப்பதை அடையாளம் கண்டனர்” என்றார். 11ஏ இருக்கையில் பயணித்த பயணியின் பெயர் ரமேஷ் விஷ்வகுமார் என்றும், அவருக்கு வயது 38 என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
போயிங் நிறுவனம் விளக்கம்: “ஆரம்பகட்ட அறிக்கைகள் கிடைத்துள்ளன. மேலும், தகவல்களை சேகரிக்க தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளது. இதனிடையே, பங்குச் சந்தையில் போயிங் நிறுவன பங்குகள் வெகுவாக சரிந்துள்ளன.
டாடா குழுமம் நிவாரண நிதி அறிவிப்பு: “இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் டாடா குழுமம் ரூ.1 கோடி வழங்கும். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் நாங்கள் ஏற்கிறோம். அவர்களுக்கான சிகிச்சையை உறுதி செய்வோம். விபத்தில் சேதமடைந்த பி.ஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தை புனரமைப்பதில் எங்களது பங்கு இருக்கும்” என்று டாடா குழுமம் தெரிவித்துள்ளது.