Published on : 09 Jun 2023 14:45 pm
பாக் ஜலசந்தி கடல் பகுதியில் காத்திருந்த சரக்கு கப்பல் ஒன்றும், மண்டபத்தில் மராமத்துப் பணி முடிந்த விசைப் படகுகளும் பாம்பன் ரயில் தூக்குப் பாலம் திறக்கப்பட்டதும் மன்னார் வளை குடா கடல் பகுதிக்குச் சென்றன. | படங்கள்: எல்.பாலசந்தர்
சென்னை, காக்கிநாடா, விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட வடக்குப் பகுதி துறைமுகங்களிலிருந்தும், தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென்பகுதி துறைமுகங்க ளிலிருந்தும், குஜராத், மும்பை, கோவா, கேரளா போன்ற மேற்கு பகுதி மாநில துறைமுகங்களிலிருந்தும் சிறிய ரக கப்பல்கள் பாம்பன் ரயில் தூக்குப் பாலம் வழியாக பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா மற்றும் வங்க கடல் களில் பயணித்து வருகின்றன.
கடலில் சாதகமான வானிலை நிலவினால் மட்டுமே இக்கப்பல்கள் ரயில்வே தூக்குப் பாலத்தை கடக்க அனுமதிக்கப்படுகின்றன.
கடந்த 3 நாட்களாக காக்கி நாடா துறைமுகத்திலிருந்து வந்த சிறிய ரக தனியார் சரக்கு கப்பல், பாம்பன் பாலத்தை கடந்து கர்நாடக மாநிலம் மால்தே துறைமுகத்துக்கு செல்வதற்காக பாக் ஜலசந்தி கடல் பகுதியில் காத்திருந்தது.
கடலில் வானிலை சீரான நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் பாம்பன் ரயில் தூக்குப் பாலம் தூக்கப்பட்டதும் சரக்கு கப்பல் அப்பகுதியை கடந்து சென்றது.
3 ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளும், மண்டபத்திலிருந்து மராமத்து செய்யப்பட்ட விசைப்படகுகளும் தூக்குப் பாலத்தை கடந்து சென்றன.