Published on : 27 May 2023 17:26 pm
கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவியேற்றது. அதன்பிறகு இந்தியா முழுவதும் ஆங்கிலேய ஆட்சி சுவடுகளின் அடையாளத்தை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி பிரதமர் இல்லம் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலை, லோக் கல்யாண் சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
குடியரசு தின விழாவின் பாசறை திரும்பும் அணிவகுப்பில் ஆங்கிலேயர்களின் பாடல் நீக்கப்பட்டு, இந்திய பாடல் சேர்க்கப்பட்டது. அந்தமான்-நிகோபர் தீவில் ஆங்கிலேயர் பெயர்களில் இருந்த தீவுகளுக்கு சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட இந்திய தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட இந்திய கடற்படையின் கொடி மாற்றி அமைக்கப்பட்டது.
ஆங்கிலேயர் சுவடுகள் நீக்கம்: இந்த வரிசையில் ஆங்கிலேயர் கால சுவடுகளை நீக்கும் வகையில் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார்.