போயஸ் கார்டன் வீட்டில் இன்று ரஜினியை சந்திக்கிறார் மோடி

போயஸ் கார்டன் வீட்டில் இன்று ரஜினியை சந்திக்கிறார் மோடி
Updated on
1 min read

தேர்தல் பிரச்சாரத்துக்காக இன்று மாலை சென்னை வரும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். போயஸ் கார்டன் வீட்டுக்கே சென்று ரஜினியை மோடி சந்திப்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஏற்கெனவே 2 முறை (திருச்சி, சென்னை) தமிழகம் வந்து சென்றுள்ளார். தற்போது கூட்டணி இறுதியாகி பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், மீண்டும் தமிழகம் வர மோடி முடிவு செய்துள்ளார். இங்கு அவர் 3 நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

முதல்கட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அவர் சென்னை வருகிறார். மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையின் 3 தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு டெல்லி செல்லும் நரேந்திர மோடி, மீண்டும் 16 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதற்கிடையே, இன்று சென்னை வரும் மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இந்த சந்திப்பு நடக்கக் கூடும் என முதலில் கூறப்பட்டது. ஆனால், பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக மாலை 5 மணிக்கு போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டுக்கே சென்று அவரை மோடி சந்தித்துப் பேச இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in