துலுக்கர்பட்டி 2-ம் கட்ட அகழாய்வில் 450 அரிய பொருட்கள் கண்டெடுப்பு

திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் நம்பியாற்றங்கரையில் நடைபெறும் 2-ம் கட்ட அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்கள்.
திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் நம்பியாற்றங்கரையில் நடைபெறும் 2-ம் கட்ட அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்கள்.
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டி நம்பியாற்றங்கரையில் விளாங்காடு பகுதியில் 2-ம் கட்டமாக நடைபெற்றுவரும் அகழாய்வில் 450 அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி அருகே கண்ணநல்லூர் கிராமம் செல்லும் சாலையில் நம்பியாற்று படுகையில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இப்பகுதி விளாங்காடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு அகழாய்வுப் பணி 2021-ம் ஆண்டு தொடங்கியது.

முதற்கட்ட அகழாய்வில் செவ்வண்ணம், கருப்பு சிவப்பு வண்ண மட்கல பானை ஓடுகள், பழந்தமிழர் குறியீடுகள், இரும்பு ஆபரணங்கள், கண்ணாடி அணிகலன்கள் உள்ளிட்ட 1,009 அரிய தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. மேலும் இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் வெளிநாட்டினரோடு வணிகம் செய்திருக்கலாம் என்பதற்கான சான்றுகளும் கிடைத்திருந்தன.

தற்போது நடைபெற்று வரும் 2-ம்கட்ட அகழாய்வில் ஈமத்தாழிகள், ஈட்டி, மோதிரம், அணிகலன்கள் உள்ளிட்ட 450 அரிய வகை தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றை டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் ஆய்வுக்கு அனுப்ப உள்ளதாகவும், இப்பகுதி இரும்புகால வாழ்விடப் பகுதியாக கருதப்படுவதால் இன்னும் பல அரிய வகை தொல்லியல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தொல்லியல் துறை இயக்குநர் வசந்தகுமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in