

ஏ.கே.அந்தோனி பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில்தான் நாட்டின் பாதுகாப்பு பெருமளவில் பாதிப்புக்குள்ளானது. இதற்காக அவர் நாட்டு மக்களுக்கு விளக்கம் சொல்லியாக வேண்டும் என்றார் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.
காசர்கோடில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய தாவது: பாதுகாப்பு அமைச்சக இலாகாவுக்கு அந்தோனி தலைமை வகித்த காலத்தில்தான் இந்திய ராணுவம் சிறந்த தளவாடங்கள் எதையும் வாங்கவில்லை.
அவரது பதவி காலத்தில்தான் நமது ராணுவ வீரர்களை பாகிஸ்தான் துருப்புகள் தலை துண்டித்து கொன்றன. கடற்படை நீர்மூழ்கி கப்பல்களில் விபத்து, கடற்படை கப்பல்களில் தீவிபத்து காரணமாக கடற்படை தளபதி டி.கே.ஜோஷி விலகியது ஆகியவை நடந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இந்தியா தனது மிக நெடிய கடற் கரையை எப்படி காப்பாற்றிக் கொள்ள முடியும். கேரள கடற்பகுதியில் மீன்பிடித்த இந்தியாவின் 2 மீனவர்களை இத்தாலி கடற் படையினர் சுட்டுக்கொன்றனர். அந்த இரு வீரர்களும் எந்த சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை முதல்வர் உம்மன் சாண்டியும் ஏ.கே. அந்தோனியும் தெரிவிக்க வேண்டும்.
நாட்டுக்குத் தேவைப்படுவது வலிமையான அரசே. அத்தகைய அரசு அமைய பாஜக கூட்டணிக்கு 300 தாமரை மலர்களை கொடுங்கள். சில மாநிங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு இடம் கூட பெற முடியாது.
கேரளத்திலும் நாட்டிலும் பெண்களுக்கு எதிரான கொடுமை அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிராக அதிக கொடுமை நடப்பதாக பட்டியலிடப்பட்ட முதல் 10 மாநிலங்களில் 6 மாநிலங்கள் காங்கிரஸ் ஆள்பவை.
இந்த 10 மாநிலங்கள் பட்டியலில் பாஜக ஆளும் மாநிலம் ஒன்று கூட இல்லை.
கேரளம் அதிக அளவில் எழுதப்படிக்கத் தெரிந்த மாநிலமாக இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து உள்ளன.
கேரளத்தில் காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மார்க் சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் நட்பு ஆட்டம் ஆடுகின்றன.
5 ஆண்டுக்கு காங்கிரஸ் தலை மையிலான கூட்டணி ஆட்சி புரிந்தால் அடுத்து இடதுசாரி முன்னணி ஆட்சி புரிகிறது.எனவே ஒரு முன்னணி செய்யும் தவற்றை அடுத்த முன்னணி பேசுவதில்லை. காங்கிரஸ் கட்சி தர்ப்பூசணி போன்றது. வெளியே பச்சை நிறமாக இருந்தாலும் உள்ளே சிவப்பை உடையது.
கேரளம் பயங்கரவாத நாற்றுப் பண்ணையாக மாற்றப்பட்டுள்ளது. மருத்துவத்துறையிலும் ஆயுர் வேதத்திலும் தம்மிடம் உள்ள திறமையை பயன்படுத்த மாநில அரசு தவறிவிட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. வேலை தேடி வேறு நாடுகளுக்குச் செல்கிறார்கள். இங்குள்ள பசுமை வளம் வெளிநாடுகளில் உள்ள வர்களால் அனுப்பப்படும் பணத் தால்தான் என்றார் மோடி. கட்சி வேட்பாளர் கே.சுரேந்திரனுக்கு ஆதரவு திரட்டினார் மோடி.