

சுற்றுலா என்றாலே அருவி, மலைப்பிரதேசங்கள், கடற்கரை, கேளிக்கைப் பூங்கா, கோயில் உள்ளிட்ட இடங்களே பெரும்பாலானவர்களின் தேர்வாக இருக்கிறது. இந்த வரிசையில் அருங்காட்சியகத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், சுற்றுச்சூழல், அரசியல், கல்வி, பொருளாதாரம், சமூகப் பண்பாட்டுத் தளங்களில் நிகழ்ந்த வளர்ச்சி, துயரம், போராட்டம், விடுதலை அனைத்தையும் அறிய அருங்காட்சியகங்களே உதவுகின்றன.
ஷான்ங்ஜி அருங்காட்சியகம்: 2019இல் சீனாவின் ஷியான் நகரில் உள்ள ஷான்ங்ஜி வரலாற்று அருங்காட்சியகத்துக்குச் சென்றிருந்தேன். ஷியான் நகரை நிறுவி ஆட்சிசெய்த 14 வம்சங்களில் முக்கியமான நான்கு வம்சங்களைப் பற்றிய அருங்காட்சியகம் அது. அகழாய்வில் கிடைக்காதவற்றைத் தத்ரூபமாகச் செய்துவைத்திருக்கிறார்கள். அங்கே மாணவர்களால் அருங்காட்சியகம் நிரம்பிவழிந்தது. கோடை விடுமுறையாக இருந்தபோதும் மாணவர்களை ஆசிரியர்கள் அழைத்து வந்திருந்தார்கள். மாணவர்கள் மனத்தில் உற்சாகம் கரைபுரண்டது.
லண்டன் அருங்காட்சியகங்கள்: லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் சென்றிருந்தபோது, ஆசிரியர்களுடன் தொடக்கப்பள்ளி மாணவர்களைப் பார்த்தேன். மாணவர்கள் தங்களுக்கு முன் இருந்த காட்சியைக் குறிப்பேட்டில் வரைந்தார்கள். வியந்தேன். லண்டன் கோபுரத்தில் உள்ள அருங்காட்சியத்துக்குச் சென்றிருந்தபோதும், சிறார்களின் கூட்டத்தில் மிதந்தேன். குறிபார்த்து டாங்கிகளை இயக்குவது, குதிரை ஓட்டுவது, சரியான விடைகளைப் பொறுத்துவது என வீடியோ கேம் வடிவில் வரலாற்றைக் கற்பிக்கிறார்கள்.
சேகரிக்கப்படும் நினைவுகள்: ஜப்பானிலும் அருங்காட்சியகங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பெற்றோர்களுடன் குழந்தைகளைப் பார்த்தேன். அங்கே சிறுவர்களும் பெரியவர்களும் தாங்கள் கொண்டுவந்திருந்த குறிப்பேட்டில் அச்சு பதித்து நினைவுகளைச் சேகரித்தார்கள்.
நமக்கான வரலாறு: நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய அரசர்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், மதம், இயல் இசை நாடகக் கலைஞர்கள் போன்றோருக்கும் தனித்தனி அருங்காட்சியகங்கள் இருப்பதைப் பல நாடுகளில் பார்த்துள்ளேன். பழம்பெரும் பாரம்பரியம், பண்பாடு, கலை, இலக்கிய செழுமைமிக்க தமிழ்நாட்டில் வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் அருங்காட்சியகங்கள் சிலதான் இருக்கின்றன. என் பள்ளி, கல்லூரி நாட்களில் ஆசிரியர்கள் அருங்காட்சியம் குறித்துப் பேசியதாககூட நினைவில்லை. இனியாவது, கடந்தகால வரலாறுகளைப் பாதுகாப்பதிலும் தேடிச் செல்வதிலும் ஆர்வமிக்க சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும்.
மரச்சாமான்கள், மண்பாண்டங்கள், நெசவு, ஓவியம், தெருக்கூத்து, மாவட்டங்களின் சிறப்புகளை உள்ளடக்கிய தனித்தனி அருங்காட்சியகங்களை உருவாக்க வேண்டும். சேர, சோழ, பாண்டிய, பல்லவ, மராட்டிய அரசர்களும், குறுநில மன்னர்களும் சமயம், பொருளாதாரம், பண்பாடு, நாணயம், போர்திறன், இலக்கியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். கிறிஸ்தவ மதத்தை அறிவிக்கவந்த சீகன் பால்கு, வீரமாமுனிவர் போன்றோர் தமிழ் வளர்ச்சிக்கும் சமூக மாற்றங்களுக்கும் உழைத்திருக்கிறார்கள். சுதந்திரத்துக் காகவும் தமிழ் மொழிக்காகவும் பலர் போராடியிருக்கிறார்கள். இலக்கியம், கணிதம், விளையாட்டு, அறிவியலால் ஏராளமானோர் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். ஒவ்வொன்றையும் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழகந்தோறும் அருங்காட்சியகங்களை அமைக்க அரசு திட்டமிட வேண்டும்.
கலகலப்பான இடமாகட்டும்: அருங்காட்சியகங்கள் அயர்ச்சியைத் தருவதாக இல்லாமல், பரப்பளவு, ஒளி, காற்றோட்டம், கற்பனை, படைப்பாற்றல், நவீனத் தொழில்நுட்பங்கள் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கலாம். ஏற்கெனவே உள்ளவற்றை மேம்படுத்தலாம். மற்ற நாடுகளில் இருப்பதுபோல, பிறமொழிப் பயணிகளும் வாசிக்கும்படி குறிப்புகளைத் தமிழ், ஆங்கிலத்தில் எழுதி வைக்கலாம். வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் பல்வேறு மொழி பேசும் வழிகாட்டிகள் இருக்கிறார்கள். இங்கும் அப்படிச் செய்யலாம். அமெரிக்காவில் 80 சதவீத அருங்காட்சியகங்கள் கல்விசார் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. கற்றல் செயல்பாடுகளுக்காக ஆண்டுக்கு 200 கோடி டாலருக்கு மேல் செலவிடுகிறார்கள். நாம் குறைந்தபட்சம் ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வுக்காக அல்லாமல், தெரிந்துகொள்வதற்காக ஒவ்வோர் அருங்காட்சியகத்தையும் அறிமுகப்படுத்தலாம். - கட்டுரையாளர்: பயணக் கட்டுரைகள் எழுதுபவர், தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com