

நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை வீழ்த்துவதற்காக, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக, காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள நீலகிரி வேட்பாளரின்
பொறுப்பற்ற தன்மையினால் அத்தொகுதியில் தாமரைச் சின்னத்திற்கு வாக்குகளைச் சேகரிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கும் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி உருவாகியிருக்கிறது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும் மத்திய அரசும் ஊழல் கறை படிந்தவைகளாகவே இயங்கி வருவது மறுக்க முடியாத கசப்பான உண்மை. ஆனால் இந்தியா முழுவதும் ஊழலின் நாயகனாக மக்களிடையே காட்சி தரும் மனிதர் ஆ.ராசா என்பதை மறுப்பதற்கில்லை.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து மத்திய அரசில் இடம் பெற்று மிக முக்கியமான தகவல் தொழில்நுட்பத் துறையை நிர்வகிக்கும் அளவுக்கு உயர்ந்த ராசா என்ற தனி நபர் மீது நமக்கு எந்தப் பகைமையுமில்லை. ஆனால் தனியார் நிறுவனங்களின் நலனுக்காகவும் தன் சொந்த நலனுக்காகவும் தன்னுடைய தலைவரின் குடும்ப நலனுக்காகவும் அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டு நாட்டு மக்களுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி தமிழ் இனத்திற்கு மாறாத களங்கத்தை உருவாக்கிய மனிதர் ஆ.ராசா.
பணத்தின் மீது பற்றற்ற போதிசத்துவர்களை வேட்பாளர்களாகக் களத்தில் நிறுத்துவதற்குக் கலைஞர் கருணாநிதி ஒன்றும் புத்தபிரானில்லை. ஆனால், ஊழல் நாயகர் ஆ.ராசாவை கழக வேட்பாளராக நிறுத்தும் அளவிற்கு அவர் சமூகக் கூச்சமின்றி செயற்படுவார் என்று நீலகிரி வாக்காளர்கள் எதிர்பார்த்திருக்க நியாயமில்லை.
ஆ.ராசா வெற்றி பெற்றால் அந்தக் கணத்திலேயே தமிழகத்து அரசியலில் நேர்மைக்கு இனி இடமேயில்லை என்ற தெளிவான முடிவுக்கு நாம் வந்துவிடலாம். மின் உற்பத்தி அதிகரித்தால் நாளை மின்தட்டுப்பாடு நீங்கும். கார்மேகம் கருணை கூர்ந்தால் அடுத்த கணமே குடிநீர் தட்டுப்பாடு காணாமற்போய்விடும். ஆனால், ஊழல் ராசாக்கள் வெற்றி பெற்றால் பொது வாழ்வின் பண்பு நலன்கள் அனைத்தும் முழுவதுமாய்ப் பாழ்பட்டுப் போகும் என்பதை நீலகிரி வாக்காளர்கள் உணர வேண்டும்.
கருணாநிதி மக்களின் அறியாமையின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு ஊழல் கறை படிந்த ஆ.ராசாவை நீலகிரி தொகுதியில் வேட்பாளராக மீண்டும் நிறுத்தியிருப்பது வருத்தத்திற்குரியது. நீலகிரியில் ஆ.ராசா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஊழல் செய்தவர்களுக்கு உறுதுணையாகத்தான் தமிழகத்து மக்கள் என்றும் இருப்பார்கள் என்ற தலைக்குனிவை இந்தியா முழுவதும் ஏற்படுத்திவிடும்.
ஆரோக்கியமான அரசியலை விரும்பக்கூடியவர்களும் சமூகப் பொறுப்புணர்வுள்ள கற்றறிந்தவர்களும் நடுநிலையோடு நாட்டு நடப்புகளை மெளனப் பார்வையாளர்களாக கவனித்து வரும் வாக்காளர்களும் எந்த நிலையிலும் ஆ.ராசா மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வதை நிச்சயம் வரவேற்கமாட்டார்கள்.
நீலகிரி தொகுதி வாக்காளர்கள் ஆ.ராசாவை தோற்கடித்து ஊழல்வாதிகளுக்கு உரிய பாடத்தை வழங்கவேண்டும். அதற்காக அ.தி.மு.க. வின் வேட்பாளருக்கு ஆதரவு தருவதைத் தவிர வேறு வழியில்லை. அ.தி.மு.க. ஊழலுக்கு அப்பாற்பட்ட இயக்கம் என்று சான்று வழங்க என்னால் இயலாது. ஆனால் ஒப்பீட்டளவில் நீலகிரியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஆ.ராசாவுக்கு இணையான ஊழல் குற்றத்திற்கு உள்ளானவர் வேறு எவரும் இல்லை.
இருக்கும் தீமைகளில் பெரிய தீமையை தோற்கடிக்க சிறிய தீமையை சகித்துக்கொள்வதைத் தவிர நீலகிரி வாக்காளர்களுக்கு வேறு வழியில்லை. எனவே ஆ.ராசாவின் மிக மோசமான தோல்வியே ஊழலற்ற அரசியலுக்கு வாசற்கதவைத் திறந்து வைக்கும் முதல் முயற்சியாக இருக்கும் என்பதனால் நீலகிரி வாக்காளர்கள் அனைவரும் கட்சி வேலிகளைத் தாண்டி இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீலகிரி மாவட்டத்தில் வள்ளி ரமேஷ் தலைமையில் உள்ள காந்திய மக்கள் கட்சித் தொண்டர்கள் இரட்டை இலைக்கே வாக்களிப்பார்கள்" என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.