

தமிழகத்தில் உள்ள 42 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் பணியில் 22,680 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார். சென்னை தலைமைச் செயலகத் தில் நிருபர்களிடம் அவர் திங்கள் கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 2009 மக்களவைத் தேர்தல் மற்றும் 2011 சட்டமன்றத் தேர்தல்களில் நடந்ததுபோல் தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் எந்த வாக்குச் சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஓரிடத்தில் மட்டும் ஆள்மாறாட்ட புகாரும், சில இடங் களில் இயந்திரக் கோளாறு பிரச்சினையும் இருந்தது. ஆனால், மறுதேர்தலுக்கான வாய்ப்பு ஏற்படவில்லை.
மூன்றடுக்கு பாதுகாப்பு
மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஒன்றரை லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 42 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையைச் சுற்றிலும் முதல் அடுக்கில் 30 முதல் 40 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். அந்த அறையில் நான்கூட உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் நுழைய முடியாது.
அடுத்ததாக தமிழக சிறப்பு போலீஸ் படையினரும், மூன்றாம் அடுக்கில் தமிழக போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு மையத்துக்கு தலா 180 பாதுகாப்புப் படையினர் வீதம் 3 ஷிப்ட்களில் 22,680 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
468 வெப் கேமராக்கள்
ஒரு அறையில் 2 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு அறைக் கும் 2 வெப் கேமரா வீதம், 468 வெப் கேமராக்களை வைத்து கண்காணித்து வருகிறோம். எனது அறையில் இருந்தபடியே அனைத்து வாக்கு எண்ணும் மையங்களையும் நேரடியாக வெப் கேமரா மூலம் கண்காணிக்க முடியும். இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.
2 லட்சம் புகார்கள்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மார்ச் 5 முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அது முதல் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 2 லட்சத்து 8 ஆயிரத்து 845 புகார்கள் பெறப்பட்டன. இதில் 2,904 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக 262 எப்ஐஆர், சட்டவிரோதமான கூட்டம் மற்றும் பேச்சு தொடர்பாக 81 எப்ஐஆர் உள்பட 3,793 வழக்குகளில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.