

நாமக்கல்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் பாஜகவினர் தேசியக் கொடியேற்ற முயன்றனர். இதற்கு அறநிலையத் துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு அரத்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வளாகத்தில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக சில தினங்களுக்கு முன்பு அறநிலையத் துறையிடம் அனுமதி கேட்டு பாஜகவினர் கடிதம் கொடுத்துள்ளனர்.
இதற்கு அறநிலையத் துறையினர் எந்த பதிலும் கொடுக்கவில்லை. இந்நிலையில் உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. இந்தக் கம்பம் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. இதற்கு கார்த்திகை தீபம் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, ‘அக்கம்பக்கத்தில் கொடியேற்றக் கூடாது’ என அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர். மேலும், அறநிலையத் துறையின் இடத்தில் அரசியல் கட்சியினர் கொடியேற்ற அனுமதிக்க முடியாது என கோயில் செயல் அலுவலர் ரமணிகாந்தன் தெரிவித்தார். எனினும், அங்கு கொடியேற்ற பாஜகவினர் வலியுறுத்தினர். இதையடுத்து அப்பகுதியில் அறநிலையத்துறை அதிகாரிகள் கொடியேற்றியதையடுத்து பாஜகவினர் கலைந்து சென்றனர்.