

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி சட்டசபை தொகுதி முன்பு பூந்தமல்லி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்பில் ஆவடி தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டது. ஆவடி சட்டமன்ற தொகுதியில் ஆவடி, திருவேற்காடு நகராட்சிகள், திருநின்றவூர் பேரூராட்சி, நெமிலிச்சேரி, நடுக்குத்தகை, கருணாகரச்சேரி ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆவடி தொகுதியைப் பொறுத்தவரை பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 1955-ம் ஆண்டு ஆவடியில் அகில இந்திய மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டில் சோஷலிச சமுதாயத்தை அமைப்பதே நமது லட்சியம் என்ற தீர்மானத்தை நேரு உருவாக்கி நிறைவேறச் செய்தார்.
ஆவடி தொகுதி மத்திய அரசு தொழிற்சாலைகளின் கேந்திரமாக திகழ்கிறது. குறிப்பாக, ராணுவ தளவாடங்களான பீரங்கிகளை தயாரிக்கும் திண்ஊர்த்தி தொழிற்சாலை, ராணுவ வீரர்களுக்கான ஆடைகள் தயாரிக்கும் ஆர்டினன்ஸ் குளோத்திங் பேக்டரி, ராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவை அமைந்துள்ளன.
அத்துடன், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, விமானப்படை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்கள் அமைந்துள்ளன.
மேலும், காஷ்மீர் மாநிலத்துக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோயில் இத்தொகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆவடி தொகுதியை ஒரு ‛மினி’ பாரதவிலாஸ் எனக் கூறலாம். காரணம், இங்குள்ள ராணுவ பாதுகாப்பு தொழிற்சாலைகள் மற்றும் காவல் பயிற்சி மையங்களில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், இத்தொகுதியில் பூர்வீகமாக வசித்து வருபவர்களில் தெலுங்கு மொழி இனத்தவர்கள், முதலியார்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்டோர் அதிகளவில் உள்ளனர்.
ஆவடி தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தாலும் சென்னையின் புறநகர் எல்லைக்குள் அமைந்திருப்பதால் சென்னையில் கிடைக்கும் போக்குவரத்து வசதிகள் இங்கும் கிடைக்கின்றன. குறிப்பாக, ஆவடியில் இருந்து அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து வசதி உள்ளது. இதனால் மக்களுக்கு போக்குவரத்தில் எவ்வித சிரமும் இல்லை. இதனால் சென்னையில் பணிபுரிவர்கள் ஏராளமானவர்கள் ஆவடியில் வசிக்கின்றனர்.
ஆனால், ஆவடியில் போதிய சாலை வசதிகள் இல்லாமல் இருப்பது பெரிய குறையாக உள்ளது. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை (எண்.205) ஆவடி வழியாக செல்கிறது.
200 அடி அகலத்துக்கு அமைக்க தீர்மானிக்கப்பட்ட இச்சாலை வணிகர்களின் கடும் எதிர்ப்பையடுத்து தற்போது 80 அடி அகலத்துக்கு மட்டுமே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இச்சாலையில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதேபோல், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் ஆகியவை தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை நிறைவேற்றப்படாதது தொகுதி மக்களிடையே மிகப் பெரிய குறையாக உள்ளது.
அதேபோல், ஆவடியில் பல மாநிலத்தவர்கள் வசிப்பதால் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்கள் ஆவடியில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்காக பல ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், இன்னும் இக்கோரிக்கை முழுமையாக நிறைவடையவில்லை. அதேபோல் ஆவடியில் தரமான மருத்துவமனை இல்லாதது தொகுதி மக்களுக்கு ஒரு பெரும் குறையாக உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு இத்தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம் வெற்றி பெற்று இத்தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ’
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | க.பாண்டியராஜன் | அதிமுக |
2 | சா.மு.நாசர் | திமுக |
3 | ஆர்.அந்திரிதாஸ் | மதிமுக |
4 | ந.ஆனந்தகிருஷ்ணன் | பாமக |
5 | ஜெ.லோகநாதன் | பாஜக |
6 | சே.நல்லதம்பி | நாம் தமிழர் |
தொகுதி எல்லைகள்
ஆவடி நகராட்சி, திருநின்றவூர் பேரூராட்சி, திருவேற்காடு பேரூராட்சி மற்றும் பூந்தமல்லி வட்டம் நடுகுத்தகை, நெமிலிச்சேரி மற்றும் கருணாகரச்சேரி கிராமங்கள்
29/4/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 200029 |
பெண் | 198089 |
மூன்றாம் பாலினித்தவர் | 88 |
மொத்த வாக்காளர்கள் | 398206 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் | |
1 | அப்துல் ரஹீம் | அதிமுக | 110102 | |
2 | தாமோதரன் | காங்கிரஸ் | 66864 | |
3 | ஜெயராமன் | சுயேச்சை | 10460 | |
4 | லோகநாதன்.ஜி. | பிஜேபி | 3785 | |
5 | சத்யமூர்த்தி | பி எஸ் பி | 1656 | |
6 | பக்தவச்சலு | ஜே எம் எம் | 1336 | |
7 | ஜெயராமு | சுயேச்சை | 1114 | |
8 | ஜெயராமன் | சுயேச்சை | 828 | |
9 | ரவிஆறுமுகம் | சுயேச்சை | 585 | |
10 | முல்லைதமிழன் | சுயேச்சை | 540 | |
11 | ஷா நவாஸ் கான் | சுயேச்சை | 471 | |
12 | பரமானந்தம் | எல் எஸ் பி | 416 | |
13 | ராகுலன் | சுயேச்சை | 391 | |
14 | கோவிந்தராஜ் | சுயேச்சை | 290 | |
15 | அமராவதி | சுயேச்சை | 277 | |
16 | கோதண்டன் | சுயேச்சை | 157 | |
17 | கமலேஷ் | சுயேச்சை | 148 | |
18 | பிரபு | சுயேச்சை | 105 | |
199538 | ||||