

கிசன்கஞ்ச் தொகுதியில் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக, போட்டியிலிருந்து விலகினார். இதனால், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார்.
கிசன் கஞ்ச் தொகுதியின் ஐக்கிய ஜனதா தளம் வேட் பாளராக அறிவிக்கப்பட்ட அக்தருல் இமான் கூறுகையில், “சிறுபான்மையினர் வாக்குகள் சிதறி விடக்கூடாது என்பதற்காக, காங்கிரஸ் வேட்பாளர் மவுலானா அஸ்ரபுல் ஹக்குக்கு ஆதரவாக போட்டியிலிருந்து விலகி விட் டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அக்தருல் இமான் சமீபத்தில் தான் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் 13 எம்.எல்.ஏ.க்கள் விலகினர். அதில், அக்தருல் முக்கியமானவர். விலகிய சிலர் ஒரே நாளில் மீண்டும் லாலு கட்சியில் இணைந்தாலும், அக்தருல் இமான் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்தார். அதற்குப் பலனாக, கிசன்கஞ்ச் மக்களவைத் தொகுதி வேட்பாளராகக் களமிறக் கப்பட்டார் அக்தருல்.
ஆனால், நிதிஷ் குமாருக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் போட்டியிலிருந்து அக்தருல் விலகி விட்டார். வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 9-ம் தேதி கடைசிநாள் என்பதால் மாற்று நபரைக் களமிறக்க முடியாத நிலைக்கு நிதிஷ் தள்ளப் பட்டுள்ளார். முன்னதாக, ஷியோகர் தொகுதியின் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் ஷபீர் அலியும் போட்டியிலிருந்து விலகி விட்டார். ஆனால், அவருக்குப் பதிலாக அமைச்சர் ஷாகித் களமிறக்கப்பட்டுள்ளார்.