

புதுடெல்லி: கடந்த பிப்ரவரி இறுதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் சிக்கித் தவித்த சுமார் 18,000 இந்திய மாணவ, மாணவியரை மத்திய அரசு மீட்டது. அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ கல்வி பயின்று வந்தனர்.
இந்த சூழலில் உக்ரைனில் இருந்து மேற்குவங்கத்துக்கு திரும்பிய 412 மாணவ, மாணவியரில் 172 பேருக்கு அந்த மாநில அரசு மருத்துவ கல்லூரிகளில் (எம்பிபிஎஸ்) சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 2, 3-ம் ஆண்டு வகுப்புகளில் சேர்க்கப்பட் டுள்ளனர்.
இதற்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆணைய அதிகாரிகள் கூறும்போது, "உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் விவகாரத்தில் தேசிய மருத்துவ ஆணையமே முடிவெடுக்க முடியும். மேற்குவங்க அரசு தன்னிச்சையாக அவர்களுக்கு சேர்க்கை வழங்கியிருப்பது சட்டத்துக்கு புறம்பானது" என்று தெரிவித்தனர்.
மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறும்போது, ‘‘உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவ, மாணவியரை இதர ஐரோப்பிய நாடுகளின் கல்வி நிறுவனங்களில் சேர்ப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். இவர்கள் தவிர சீனா, ஜார்ஜியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ கல்வி பயின்ற 65,000 பேர் பயண கட்டுப்பாடுகளால் கல்வியை தொடர முடியாமல் தவிக்கின்றனர். இந்த பிரச்சினை குறித்தும் ஆலோசித்து வருகிறோம். வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் விவகாரத்தில் மாநில அரசுகள் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளன.