

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்தார்.
வாசன் வருவதற்கு தாமதமானதால் தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.சி.பாபு பேசினார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் துணைத் தலைவர் மகேஸ்வரி பேசியது:
“மக்களின் பிரச்சினைகளை அறியாதவராக இருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆனால் நாட்டின் பிரதமராக ஆசைப்படுகிறார்.
இதற்காக ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது எண்ணம் பலிக்காது. பார் வைத்து பீர் விற்கும் அவமானத்தை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி தான் சோறு போட்டு பிள்ளைகளை வளர்த்ததே திமுகவை கூறுபோடத் தான் என்பதை போல பல கூறுகளாக திமுக சிதைந்து கிடக்கிறது. தலைவரைப் போன்றே திமுக மூன்று சக்கர வண்டியில் முடங்கிக் கிடக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு பொது மன்னிப்பு அளிப்பதாக கருணாநிதி கூறுகிறார். தவமிருந்து பெற்ற தலைச்சம் பிள்ளையின் ஆதரவை முதலில் நீங்கள் கேளுங்கள்.
நாங்கள் மதவாதத்துக்கு எதிரானவர்கள் எனக் கூறிக்கொள்ளும் பாஜக எதற்காக மீண்டும் ராமர் கோயிலை கட்டுவோம், பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது? பாஜக ஆட்சிக்கு வந்தால், மத நல்லிணக்கம் பாழ்படும் என்பதை மக்கள் உணர வேண்டும்” என்றார் அவர்.
இவரது சரளமான பேச்சு, திமுக மற்றும் அதிமுகவை சாடிய முறைகளை கூட்டத்தினர் வெகுவாக ரசித்தனர்.